நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்யும் வட மாநில பெண் ஒருவர் போலீசாருக்கு போன் செய்து புகாரளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. 


மும்தாஜ்..


மல மல பாடல் மூலம் நன்கு பரிட்சியமானவர் மும்தாஜ். மோனிஷா என் மோனலிசா படத்தில் அறிமுகம் என்றாலும் குஷி படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்தார். பின்னர் பல்வேறு படங்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் இவர் அண்ணா நகரில் உள்ள 'எச்' பிளாக் பகுதியில் சகோதரனுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த 23வயதான  முஜூதீன் என்பவரும் அவரது தங்கையும் பணிப்பெண்களாக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இருவரில் ஒருவரான முஜூதீன்தான் தற்போது போலீசாருக்கு புகாரளித்துள்ளார்






போலீசில் புகார்..


கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மும்தாஜ் வீட்டில் பணியாற்றும் முஜூதீன் அண்ணா நகர் பகுதியில் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, தான் மும்தாஜ் வீட்டில் வேலை பார்ப்பதாகவும் தன்னை ஊருக்குச் செல்ல அவர் அனுமதிக்கவில்லை என்றும், இது குறித்து போலீசாருக்கு புகாரளிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 100க்கு போன் போட்டுக்கொடுக்கவும் தன்னுடைய புகாரை தெரிவித்துள்ளார் முஜூதீன். உடனடியாக புகாரை ஏற்றுக்கொண்ட அண்ணா நகர் போலீசார் முஜூதீனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 






வீட்டுக்கு போகணும்..


போலீசாரிடம் பேசிய முஜூதீன்,'' நானும் என் தங்கையும் 6 வருடங்களுக்கு மேலாக மும்தாஜ் வீட்டில் தங்கி பணியாற்றி வருகிறோம். சில மாதங்களாக போன் பயன்படுத்தவோ, டிவி பார்க்கவோ எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. அதிக வேலை கொடுக்கின்றனர். வீட்டுக்குச் செல்லவும் அனுமதிக்கவில்லை. எங்களை வீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து மும்தாஜ் வீட்டுக்குச் சென்ற போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.


இந்த புகாருக்கு விளக்கம் அளித்த மும்தாஜ் தரப்பு, ''அக்கா, தங்கையிடையே பிரச்சினை இருப்பதால் முஜூதீன் வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டிருப்பார். இருவரையும் எங்கள் வீட்டு பெண்ணாகவே நாங்கள் நடத்தினோம்’’ எனக் கூறியுள்ளனர். முஜூதீன் தங்கை மும்தாஜ் வீட்டிலேயே தங்கி இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முஜூதீனை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ள போலீசார் அவரது பெற்றோருக்கு போன் செய்து சென்னைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கிடையே பணிப்பெண்களுக்கு வேறு ஏதேனும் தொல்லைகள் கொடுக்கப்பட்டதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்