ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வரும் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த 38 வயதான விமலா கடந்த சில நாட்களுக்கு முன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். அப்போது அவரை சி.டி.ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, ஸ்கேன் எடுக்கும் அறைக்கு முன், விமலா வரிசையில் காத்திருந்தபோது, அருகில் நின்றிருந்த ஒரு பெண் இவரிடம் அக்கரையோடு பேசியுள்ளார்.
மேலும் படிக்க : மூதாட்டியை கொலை வழக்கில் உதவிய நாய்: பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்த காவல்துறை
அப்போது அந்தபெண், "ஸ்கேன் எடுக்கும்போது நகைகள் அணிந்திருக்க கூடாது. எனவே, உனது நகைகளை கழற்றி என்னிடம் கொடுத்து விட்டு உள்ளே போ. நீ திரும்பி வந்ததும் இதேபோல் எனக்கு உதவு என்று அந்தப்பெண் விமலாவிடம் கூறியுள்ளார். அதை நம்பி விமலா தனது நகையை கழற்றி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ஸ்கேன் எடுத்து விட்டு வெளியே வந்து பார்த்தபோது, அந்த பெண் நகையுடன் மாயமானது கண்டு விமலா அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மருத்துவமனை போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தபோது, விமலாவிடம் நகையை பறித்து சென்றபெண், கீழ்ப் பாக்கம் ஓசான் குளத்தை சேர்ந்த 53 வயதான சாந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளை குறி வைத்து, அவர்களின் பணம், நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக, அவர் மீது பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, சாந்தியிடம் இருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்