பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை அடுத்து சென்னை மாநகரப் போலீஸ் சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் அருண், பதவி ஏற்றவுடன், செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த ஒற்றை வரி, ரவுடிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது. ரௌடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழிகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி எடுத்த எடுப்பிலேயே அருண் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடரும் ரவுடிகள் வேட்டை
சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்றது தொடர்ந்து, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் முடக்கி விடப்பட்டுள்ளன. தொடர்ந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வரும் ரவுடிகளும் தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
நீதிமன்றங்கள் சரணடையும் ரவுடிகள்
இதுபோக கடந்த சில வாரங்களில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மூன்று என்கவுண்டர் சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் , தொடர்புடைய ரவுடி திருவேங்கடம், தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகிய மூன்று ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் சென்னை மற்றும் சென்னை மாநகர பகுதிகளில் இருக்கும் ரவுடிகளுக்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரவுடிகள் தாமாக முன்வந்து நீதிமன்றங்களில் சரணடைந்து வருகின்றனர்.
கஞ்சா விற்பனை
இந்தநிலையில் கடந்த வாரம், மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, ஆதனூர் சாலையில், கஞ்சா விற்பனை நடப்பதாக, ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு சென்ற ஓட்டேரி போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்பியோடினர். அப்போது, சாலையில் தவறி விழுந்து, படுகாயமடைந்த ஒருவரை போலீசார் பிடித்தனர். அதன்பின், மருத்துவமனையில் சேர்த்து, பின் காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், வண்டலூர் ஓட்டேரியை சேர்ந்த சிலம்பு என்ற சிலம்பரசன், 30, என தெரியவந்தது.
இவர் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளி. தப்பியோடிய மற்றொருவர், அம்பேத்கர் நகர் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த மணி என்ற பிகில் மணி, 32, என தெரிந்தது. இவரை கைது செய்த போலீசார், 1.150 கிலோ கஞ்சா, ஒரு கத்தி மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்வற்றை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மணியை ஓட்டேரி போலீசார் தேடி வந்தனர்.
பிரபல ரவுடி பிசில் மணி
இந்தநிலையில் நேற்று தாம்பரம் நீதிமன்றத்தில் பிகில் மணி கஞ்சா வழக்க தொடர்பாக சரணடைந்துள்ளார். சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து என்கவுன்டர் நடைபெற்று வருவதால், தான் உயிருக்கு பயந்து சரண்டர் அடைவதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையே மேல்..
பிகில் மணி மீது தாம்பரம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மணிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்றங்களை மணி செய்து வருவதால், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும் இருந்து வருகிறார். ஏற்கனவே மணி தேடப்பட்ட குற்றவாளி என்பதால் நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.