திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.


சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ‘எனது வீட்டில் மேட்ரி மோனியல் மூலமாக வரன் பார்த்து வந்தனர். இதில் கடந்த அக்டோபர் மாதம் ஐயப்பன்தாங்கல் ஆதித்தனார் சாலை பகுதியை சேர்ந்த 29 வயதான தீபக் என்ற நபருடன் மாதவாரத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


25 சவரன் நகை மாப்பிள்ளைக்கு இரண்டு சவரன் நகை, 73 லட்சம் மதிப்பிலான வீட்டுப்பொருட்கள் வரதட்சனையாக மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர். அதற்கு நாங்கள் 15 சவரன் நகை மட்டும் போட முடியும் என தெரிவித்தோம்.


கடந்த நவம்பர் மாதம் தீபக் என்னிடம் தனியாக பேச வேண்டும் என மாமல்லபுரம் அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கட்டாயப்படுத்தி என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.


தொடர்ந்து, என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி எனது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் அடிக்கடி வீட்டுக்கு வந்து பலமுறை அவரது ஆசைக்கு இணங்க செய்தார். மேலும் எனக்கு வேலை வாங்கி தருவதாக பெங்களூர் அழைத்துச் சென்று அங்கே ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைத்து அங்கும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.


இந்தநிலையில், தற்போது மாப்பிள்ளை வீட்டார் 25 சவரன் நகை மற்றும் 13 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வோம். இல்லையென்றால் திருமணத்தை நிறுத்தி விடுவோம் என மிரட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஆசை வார்த்தை கூறி என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தீபக் மற்றும் வரதட்சனை கேட்டு மிரட்டிய அவரது அம்மா ஷோபா, அண்ணன் சஞ்சய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதில் தெரிவித்திருந்தார்.


இதனையடுத்து இது குறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் தீபக் பல்வேறு இடங்களுக்கு இளம் பெண்ணை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தீபக் மீது வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் நேற்று காலை தீபக்கை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.