வாங்கிய கடனை திருப்பித்தருவதாக கூறி முதியவரை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று ரூ.7 லட்சத்துக்கு வாலிபர் அடமானம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் 40 வயதான லட்சுமி . இவர், சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 70 வயதான எனது தந்தை சக்திவேல், தாயாருடன் வசித்து வருகிறார். எனது தந்தையின் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையை சேர்ந்த வாலிபர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
அவர் எனது தந்தையிடம் குடும்ப கஷ்டங்களை கூறி ரூ.25 லட்சம் கடனாக பெற்றுள்ளார். பின்னர் அந்த தொகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அந்த வாலிபர் கடந்த 10 ஆம் தேதி எனது தந்தையிடம், தனக்கு வெளிநாட்டில் வசிக்கும் சிலர் பணம் தர வேண்டி உள்ளது. நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி தருகிறேன். பின்னர் இருவரும் வெளிநாட்டை சுற்றி பார்த்து விட்டு வரலாம் என கூறி உள்ளார்.
மேலும் படிக்க : World Athletics Championships 2022: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார் நீரஜ்! 19 ஆண்டுகள் பின் இந்தியாவுக்கு பதக்கம்
இதனை நம்பிய எனது தந்தை சக்திவேல் உக்ரைன் அருகே உள்ள ஒரு நாட்டிற்கு அந்த வாலிபருடன் சென்றுள்ளார். அங்கு அந்த வாலிபர் எனது தந்தையை அந்த நாட்டை சேர்ந்தவரிடம் ரூ.7 லட்சத்துக்கு அடமானமாக வைத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு வந்து விட்டார். இதுபற்றி எனது தந்தை வாட்ஸ்அப் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். எனவே எனது தந்தையை மீட்டு தருவதோடு அவரை ஏமாற்றி வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பேராவூரணியில் நடைபெற்றதால் பேராவூரணியில் புகார் அளிக்குமாறு சென்னை அண்ணாநகர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சக்திவேலின் மனைவி அலமேலு, அதே புகாரை பேராவூரணி போலீசில் அளித்தார். அதன் பேரில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்