சென்னை, போரூரில் தனியார் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரப்பாளையத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்ற மாணவர் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.


கல்லூரி மாணவர் தற்கொலை:


இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். 18 வயதே ஆன இந்த மாணவர் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது விடுதி அறையில் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதையடுத்து சக மாணவர்கள் அவரது அறையில் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர். அறையின் உள்ளே ரிஷிகேஷ் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். பின்னர், காவல்துறைக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவர் ரிஷிகேஷின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கல்லூரியில் ராகிங் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரமா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.


காதல் விரக்தி:


போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த மாணவர் ரிஷிகேஷ் கடந்த 3 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண் கடந்த சில நாட்களாக ரிஷிகேஷூடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பெண்ணுடன் பேச ரிஷிகேஷ் செல்போனில் முயற்சித்தபோதும் அந்த பெண் அவரிடம் பேசவில்லை.


இதனால், கடுமையான ரிஷிகேஷ் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். காதலியுடன் பேச முடியவில்லை என்ற விரக்தியில் இருந்த ரிஷிகேஷ் நேற்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


மாணவர்கள் அதிர்ச்சி:


போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரின் செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். காதலி பேசாத விரக்தியில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல. நண்பர்களுடனோ, பெற்றோர்களுடனோ மனம் விட்டு பேசி தனிமையில் இல்லாமல் இருந்தாலே பல பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரலாம். இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.