குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவர் ஆன்லைனில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படித்து வருகிறார். மதுரையில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 17, 18ல் கருத்தரங்கு நடந்தது. இதற்காக விமானம் மூலம் மதுரைக்கு வந்த மாணவி, தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் தங்குவிடுதி ஒன்றில் தங்கியுள்ளார். அந்த விடுதியில் ஆன்லைன் வகுப்பில் அறிமுகமான சென்னை பெரம்பூரை சேர்ந்த அஷீஷ் ஜெயின் 22, காஞ்சிபுரம் மாடவாக்கம் ஜெரோம் கதிரவன் 22 ஆகிய இருவரும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அவருக்கு உதவுவதாக மாணவிக்கு மருந்தும், உணவும் வாங்கி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே மாணவி மயக்கமடைய அவரை இருவரும் தனித்தனியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மறுநாள் மதுரையில் இருந்து குஜராத்திற்கு சென்ற மாணவிக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் பெற்றோர் அவரிடம் கேட்டபோது மதுரையில் அறையில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார் . இதனையடுத்து குஜராத்தில் அவர்கள் உள்ளூர் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், சம்பவ இடம் மதுரை என்பதால் அங்குதான் புகார் செய்ய வேண்டும் என அம்மாநில காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ஆன்லைன் மூலமாக மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயருக்கு புகார் அனுப்பினார்.
இதை தொடர்ந்து இந்த புகார் குறித்து விசாரிக்க உதவி ஆணையர் காமாட்சி, ஆய்வாளர் கீதாலட்சுமியை நியமித்த நிலையில் மாணவியிடம் வாட்ஸ் ஆப் வீடியோவில் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தங்கயிருந்த விடுதியில் தங்கியிருந்து இரு நண்பர்களும் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனையடுத்து அவர் கொடுத்த தகவல்படி மதுரை மாநகர மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த பின்னர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அஷீஷ் ஜெயின், ஜெரோம் கதிரவனை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு நேற்றுமுன் தினம் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமாக அளிக்கப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்தி தன்னுடன் பயிலவந்த மாணவியை அவருக்கு தெரியாமலே மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்