சென்னையில் பெண் தொகுப்பாளினியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் தொகுப்பாளினி ஒருவர் கடந்த மே 13 ஆம் தேதி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ”மண்ணடியில் இருக்கும் காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் நான் அங்கு கோயில் அர்ச்சகர்யாக இருக்கும் கார்த்திக் முனுசாமி என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இதனால் நான் கோயிலுக்கு செல்லும்போது அவரிடம் பேசுவது வழக்கம். ஒருநாள் நான் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினேன்.அப்போது என்னை அவருடைய காரில் வீட்டில் விடுவதாக சொன்னார். நானும் அவரை நம்பி காரில் ஏறி வீட்டுக்கு சென்றேன். அப்போது போகும் வழியில் என்னுடைய வீடு உள்ளது. ஒருமுறை என் வீட்டுக்கு வந்து செல்லுங்கள் என சொன்னார். நான் மரியாதை நிமித்தமாக சென்றேன். அங்கு அவர் தீர்த்தம் ஒன்றை கொடுத்தார். அதை கொடுத்ததும் மயங்கிய என்னை கார்த்திக் முனுசாமி பாலியல் வன்கொடுமை செய்தார்.
நான் கண் விழித்து கார்த்திக் முனுசாமியிடம் கேட்டபோது என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். ஏற்கனவே திருமணமான நிலையில் எனக்கு தாலி கட்டினார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் கருவுற்ற நிலையில் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார். பின்னர் பிரபலம் ஒருவருடன் நெருக்கமாக இருக்கச் சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்.
நான் இதற்கெல்லாம் மறுத்தபோது கார்த்திக் முனுசாமி மனைவி என்னை மிரட்டினார். எனவே அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அர்ச்சகர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவாகரத்தில் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டது. இதற்கிடையில் முன் ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இப்படியான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கார்த்திக் முனுசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் மிரட்டுவதாகவும், இந்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் கார்த்திக் முனுசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.