சென்னையில் தொழிலதிபர் கொல்லப்பட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கால்வாயில் பிளாஸ்டிக் பையில் உடல்


சென்னை சின்மயா நகர் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக துப்புரவு பணியாளர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு முன்னதாகத் தகவல் தெரிவித்துள்ளனனர்.


இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த விருகம்பாக்கம் காவல் துறையினர் றுப்பு நிற பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசப்பட்டிருந்த சடலத்தை மீட்டனர். பின்னர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொழிலதிபர் ஒருவரது சடலம் எனத் தெரிய வந்தது.






சென்னை, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கர். இவர் கட்டுமானத் தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று (செப்.02) இரவு முதல் பாஸ்கரை காணவில்லை என்று அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், தொழிலதிபர் பாஸ்கர் கொல்லப்பட்டு அவரது உடல் கோயம்பேட்டில் இருந்து நெற்குன்றம் செல்லக்கூடிய சாலையில் சின்மயா நகர் பகுதியில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில், பிளாஸ்டிக் பையில் அடைத்து சாலையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


எடிஎம் கார்டில் எடுக்கப்பட்ட பணம்


இது குறித்து விருகம்பாக்கம் காவல் துறையினர் கூறுகையில், ``சடலமாக மீட்கப்பட்டவர் பாஸ்கரன் என அடையாளம் தெரிந்துள்ளது. நேற்று காலை வீட்டைவிட்டு காரில் புறப்பட்ட அவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து பாஸ்கரனைக் காணவில்லை என்று அவரின் மகன் கார்த்திக்  ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் முன்னதாக புகாரளித்துள்ளார். இந்த நிலையில்தான் பிஸாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் பாஸ்கர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது காரும் அந்தப் பகுதியில் அநாதையாக நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளோம். தடய அறிவியல் துறையினர் கைரேகைகளைப் பதிவு செய்துள்ளனர். பாஸ்கரனின் கை கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணிவைத்து, தலையில் அடித்த காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளமும் அவரது உடலில் உள்ளது. மேலும் நேற்றிரவு அவரின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி இரண்டு தடவை பத்தாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பாஸ்கரனின் சடலம் கிடந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம்.


பாஸ்கரனின் சடலத்தைப் பார்க்கும்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகத் தெரிகிறது. 
கொலைசெய்யப்பட்ட பாஸ்கரன், பிசினஸ் செய்துவந்துள்ளார்.


மனைவியுடன் போன் உரையாடல்


கூலிப்படையினர்தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருப்பதால் எதற்காக பாஸ்கரன் கொலைசெய்யப்பட்டார் என விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரை தனது மனைவியுடன் பாஸ்கரன் செல்போனில் பேசியுள்ளார் எனவும், அவரது ஏடிஎம் கார்டில் இருந்து இரவு 10:40, 10:50 என இரண்டு முறை அதிக அளவு பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாக விசாரணையில் கண்டறியப்ப்பட்டுள்ளது.


இந்நிலையில் தொழிலதிபர் பாஸ்கரனை கொலை செய்து கால்வாயில் வீசியவர்களை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.