கினியா நாட்டிலிருந்து, எத்தியோப்பியா வழியாக, சென்னைக்கு  கடத்தி வரப்பட்ட, ரூபாய் 3 கோடி மதிப்புடைய ஒன்றரை கிலோ போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். எத்தியோப்பியா  நாட்டின் தலைநகர் அடீஸ் அபாபா நகரில் இருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கினியா நாட்டைச் சேர்ந்த சுமார் 32 வயது ஆண் பயணி  ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் கினியா நாட்டிலிருந்து, எத்தியோப்பியா வழியாக சென்னை வந்திருந்தார்.


அந்தப் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.


 இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அவரை முழுமையாக சோதனை நடத்தினர். அவர் கொண்டு வந்திருந்த ட்ராலி டைப் சூட் கேஸை ஆய்வு செய்தனர். அந்த சூட் கேசின் அடிப்பாகத்தில் ரகசிய அறை வைத்து செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்க அதிகாரிகள் சூட் கேஸின் ரகசிய அறையை திறந்து பார்த்தபோது அதனுள், பிளாஸ்டிக் கவருக்குள் வெள்ளை நிற பவுடர் இருந்தது. அந்தப் பவுடரை சுங்க அதிகாரிகள் ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்தபோது, அது ஒரு வகையான அதிக வீரியமான போதைப்பொருள் என்று தெரிய வந்தது.


அந்தப் பவுடர் "அம்பெட்டமின்" எனப்படும் வெளிநாட்டு போதை பொருள் என்பதை, சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அது மொத்தம், ஒரு கிலோ 539 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூபாய் 3 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். அதோடு  கினியா நாட்டைச் சேர்ந்த கடத்தல் பயணியை கைது செய்தனர்.


மேலும் அந்தப் பயணியிடம் விசாரணை நடத்திய போது, இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவருடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது இவர் ஏற்கனவே சில முறை, இதை போல் இந்தியாவுக்கு வந்து சென்று உள்ளதும் தெரிய வந்தது. எனவே இவர் இதுவரை எத்தனை முறை போதை பொருளை இந்தியாவுக்கு கடத்திக் கொண்டு வந்துள்ளார்? சென்னையில் இவர் யாரிடம் இந்த போதை பொருளை கொடுக்க கொண்டு வந்தார்? சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்த நபர் சென்னையில் யார் இருக்கிறார்?என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 3 கோடி மதிப்புடைய போதைப் பொருளை, சூட்கேஸ் ரகசிய அறைக்குள் வைத்து கடத்திக் கொண்டு வந்து, கினியா நாட்டு பயணி கைது செய்யப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது