பல இளம் பெண்களுடன் பழக்கம்! பணத்தை ஏமாற்றிய இளைஞர், கொலை செய்த உறவினர்கள் !
Chennai Crime: சென்னை தாம்பரத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராததால், அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர்.

சென்னை தாம்பரம் அருகே அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் அடையாளம் தெரிந்தது. இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடலை மீட்ட போலீசார்
சென்னை தாம்பரம் - வேளச்சேரி சாலையில் கடந்த 27ஆம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே, 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடலை கண்டெடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் இளைஞரின் உடலை மீட்டு, குரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவம் நடந்தது சேலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சி.சி.டி.வி., காட்சிகள் ஆய்வு
முதற்கட்டமாக அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில், ஒருவரை இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் அழைத்து வருவது தெரியவந்தது. உடனடியாக வாகன எண் வைத்து யார் என்பது, குறித்து அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினர்.
உயிரிழந்தவர் யார் என்பது குறித்து சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெயக்குமார் (35) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர் கிண்டியில் பிரபல கடை ஒன்றில் பிரியாணி மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து ஜெயக்குமார் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
பல இளம் பெண்களுடன் பழக்கம்
பிரேத பரிசோதனையில் முதற்கட்ட அறிக்கையின்படி, ஜெயக்குமார் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. ஜெயக்குமாரின் தொலைபேசி உள்ளிட்ட அவற்றை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு, கடைசியாக யாரிடம் பேசினார் என்பது குறித்தும் விசாரணையை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயக்குமார் மனைவி மற்றும் மகளைப் பிரிந்து வாழ்ந்து வருவது தெரிய வந்தது. ஜெயக்குமார் பல இளம் பெண்களுடன் தொடர்பிலும் இருந்து வந்துள்ளார். அந்த வகையில் சென்னை சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், ஜெயக்குமாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தனிமையில் நடந்த சந்திப்புகள்
இளம் வேலை தேடி வருவதை உணர்ந்த ஜெயக்குமார், அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி வலை வீச தொடங்கியுள்ளார். அவ்வப்போது இருவரும் தனிமையில் ஒன்றாக சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. வேலை வாங்கி தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவோ கூறியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அப்பென்னிடம் இருந்து 11 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு மோதிரத்தை ஜெயக்குமார் பெற்றுள்ளார். தொடர்ந்து வேலை வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஜெயக்குமார் இருந்து வந்ததால், இளம் பெண்ணிற்கு ஜெயக்குமார் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
உறவினரிடம் முறையீடு
பணத்தை இழந்த இளம் பெண் குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த தனது, சித்தி மகன் சரவணனிடம் பணத்தை வாங்கித் தரும்படி இளம் பெண் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பணத்தை திருப்பி தராததால், பணம் மற்றும் மோதிரத்தை மிரட்டி வாங்கலாம் என சரவணன் முடிவெடுத்துள்ளார். சரவணன் சிட்லபாக்கத்தை சேர்ந்த தனது நண்பர் விக்கியுடன் சேர்ந்து ஜெயக்குமாரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.
மேலும் தனது 4 நண்பர்களுடன் இணைந்து சரவணன் மற்றும் ஜெயக்குமார் மது அருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் போதை ஏறிய ஜெயக்குமாரை நண்பர்களுடன் சேர்ந்து பணத்தைக் கேட்டு தகராறில் ஈடுபட்டது மட்டுமில்லாமல், சரமாரியாக தாக்கியுள்ளனர். சரமாரியாக நடந்த தாக்குதலில், ரத்தம் சொட்ட சொட்ட ஜெயக்குமார் மயக்கம் அடைந்துள்ளார்.
சிறையில் அடைப்பு
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 6 பேரும், ஜெயக்குமார் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே வீசி விட்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக பெண்ணின் உறவினரான குரோம்பேட்டை சேர்ந்த சரவணன் மற்றும் நண்பர்கள் ஆன விக்னேஸ்வரன், சச்சின், பிரதீப், ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகிய ஆறு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





















