காணாமல் போன நகை
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணி ரசாக் கார்டன் பகுதியில் நாகராஜன் ( வயது 49 ) தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 23.04.2025 அன்று இரவு கடையிலிருந்தபோது , கடைக்கு வந்த ஒரு பெண் மணி தாலியில் கோர்க்கும் உருப்படிகளை வாங்கி , அதற்கு அரக்கு போட வேண்டும் எனக் கூறி காத்திருந்து, சிறிது நேரத்தில் அரக்கு போட வேண்டாம் எனக் கூறி அவர் வாங்கிய தங்க உருப்படிகளுக்கான பணத்தை கொடுத்து, உருப்படிகளை வாங்கி சென்றுள்ளார்.
சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் தங்க நகைகளை சரி பார்த்தபோது , 22 கிராம் எடை கொண்ட ஒரு ஜோடி தங்க கம்மல் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து நாகராஜன் K-3 அமைந்தகரை காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி கேமிராவில் சிக்கிய பெண்
К-3 அமைந்தகரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடையிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது , தங்க கம்மல் ஜோடியை திருடிச் சென்றது சென்னை பொழிச்சலூர் நேரு நகர் வனஜா 2 வது தெருவை சேர்ந்த தாட்சாயினி ( வயது 52 ) என்பது தெரிய வந்தது.
பின்பு அவரை கைது செய்து, அவரிடமிருந்து கடையில் திருடிய 22 கிராம் எடை கொண்ட ஒரு ஜோடி தங்க கம்மல் மீட்கப்பட்டது. விசாரணையில் தாட்சாயினி மீது ஏற்கனவே சைதாப்பேட்டை, யானைகவுனி , ஜெ.ஜெ. நகர் , ஆயிரம் விளக்கு , சௌந்தரபாண்டியனார் அங்காடி மற்றும் நசரத்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் 7 திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட தாட்சாயினி விசாரணைக்குப் பின்னர் , நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆட்டோவில் வந்து , கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற 2 நபர்கள்
சென்னை மேற்கு மாம்பலம் படவேட்டம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் செல்வமணி ( வயது 26 ) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் , இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் , செல்வமணி 26.04.2025 அன்று இரவு மருத்துவமனையில் தாயாரை பார்த்து விட்டு, மறுநாள் (27.04.2025) அதிகாலை, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில், மேற்கு மாம்பலம், ரெட்டி குப்பம் சாலையில் செல்லும் போது, ஆட்டோவில் வந்த 2 நபர்கள் செல்வமணியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி , அவர் வைத்திருந்த பணம் ரூ.3,000/-ஐ பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து செல்வமணி R-6 குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். R-6 குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட செனாய் நகர் பகுதியை சேர்ந்த அனுஷ் ( வயது 24 ) , கணேஷ் ( வயது 37 ) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.1,000/-மீட்கப்பட்டது.
விசாரணையில் அனுஷ் மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகளும், கணேஷ் மீது 14 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 2 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.