இளைஞருக்கு போதை பழக்கம்

சென்னை மதுரவாயல் பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். பெண் அவரது தோழியின் சதோதரரான நவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதற்கிடையில் , நவீனுக்கு போதை பழக்கம் உள்ளது.

உறவினர்களுக்கு புகைப்படங்கள் அனுப்பிய இளைஞர்

போதை பழக்கம் , அப்பெண்ணுக்கு தெரிய வரவே திருமணத்திற்கு மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த நவீன் ,   அப்பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியும் , குறுஞ்செய்தி மூலமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் , அப்பெண்ணின் உறவினர் மற்றும் தோழிகளுடைய செல்போன்களுக்கு இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அனுப்பி அவதூறு பரப்பியுள்ளார்.

இது குறித்து , பாதிக்கப்பட்ட பெண் T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் , பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) , தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. S-7 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , மேற்படி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட கொளத்தூர் பகுதியை சேர்ந்த நவீன் ( வயது 26 ) என்பவரை கைது செய்தனர்.

குற்ற செயலுக்கு பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நவீன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

தம்பியை கத்தியால் தாக்கி , கொலை முயற்சியில் ஈடுபட்ட அண்ணன் கைது

சென்னை புளியந்தோப்பு போகிபாளையம் பகுதியில் சஞ்சய் ( வயது 23 ) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சஞ்சயின் அண்ணன் ஜவஹர் அடிக்கடி மது போதையில் வீட்டிற்கு வந்து தாயார் குமுதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 01.07.2025 அன்று காலை , சஞ்சய் மற்றும் அவரது தாயார் குமுதா வீட்டில் இருந்த போது, ஜவஹர் மீண்டும் அவரது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சஞ்சய் , ஜவஹரை சத்தம் போட்டபோது,  ஆத்திரமடைந்த ஜவஹர், சஞ்சயை தகாத வார்த்தைகள் பேசி, அவரை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதை தடுக்க வந்த தாயார் குமுதா மீதும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. தாக்குதலில் இரத்த காயமடைந்த சஞ்சய் , ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் , மேற்படி சம்பவம் குறித்து , சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில் , P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.     

P-1 புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து , மேற்படி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட புகார் தாரரின் அண்ணன்  ஜவஹர் ( வயது 24 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1  கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. 

விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜவஹர் மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி உட்பட 7 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட  ஜவஹர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.