ஓமன் நாட்டில் இருந்து பயணம்..

 

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ்  பயணிகள் விமானம் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 164 பயணிகள் பயணித்துக்கொண்டு இருந்தனர். விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் பயணித்த செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்த சுரேந்தர் (34) என்ற பயணி, விமானத்தில், மதுவை வாங்கி அதிக அளவில் அருந்தியதாக  கூறப்படுகிறது.

 

போதையில் ரகளை..

 

இதை அடுத்து பயணி சுரேந்தர் முழு போதையில், சக பயணிகளிடம் பிரச்சனை செய்தார். உடனே சக பயணிகள் விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தனர். விமான பணிப்பெண்கள் சுரேந்தரிடம் வந்து, இது 164 பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும் விமானம். இங்கு அமைதி காக்க வேண்டும். சக பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று அறிவுரைத்தனர்.

 

மாற்று இருக்கைகளில் அமர வைக்கப்பட்ட பயணிகள்..

 

ஆனால் சுரேந்தர் அதைக் கேட்காமல், போதையில் சக பயணிகளை தொடர்ந்து தடித்த வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கவும் முயன்று, நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்குள் எழுந்து நின்று ரகளையில் ஈடுபட்டதோடு, அதைக் கண்டித்த விமான பணிப்பெண்களையும் ஒருமையில் தடித்த வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

 

இதை அடுத்து விமான பணிப்பெண்கள், தலைமை விமானியிடம் புகார் செய்தனர். அதோடு போதையில் ரகளை செய்த சுரேந்தர் அருகே இருந்த, சக பயணிகளை, மாற்று இருக்கைகளில் அமர வைத்தனர். இந்தநிலையில் விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, பயணி ஒருவர் விமானத்திற்குள் ரகளை செய்து, சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கிறார். எனவே விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகளை தயார் நிலையில், சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே நிறுத்தி வைக்கும்படி கூறினார்.

 

"என்னை யாரும், எதுவும் செய்து செய்யக்கூடாது”

 

இந்த நிலையில் விமானம் நேற்று  சென்னையில் விமான நிலையத்தில் தரை இறங்கியதும், விமான பாதுகாப்பு அதிகாரிகள் அவசரமாக, விமானத்துக்குள் ஏறி, போதையில் ரகளை செய்த பயணி சுரேந்தரை சுற்றி வளைத்து பிடித்து, பாதுகாப்புடன் விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அதோடு அவருக்கு குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை போன்றவைகளை முடித்து விட்டு, விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுண்ட்டருக்கு அழைத்து வந்தனர். அப்போதும்  போதை பயணி சுரேந்தர், ”என்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது. நான் யார் என்பதை காட்டுகிறேன்” என்று, வீராப்பு பேசினார்.

 

கைது செய்து விசாரணை 

 

இதை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், சுரேந்தரை சென்னை விமான நிலைய காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். அதோடு அவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, குடி போதையில் சக பயணிகளிடமும், பணிப்பெண்கள் இடமும் ரகளையில் ஈடுபட்டார் என்று புகார் செய்தனர். இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார் போதை பயணி சுரேந்தரை, கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.