தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி  ஒருவர், இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அந்தக் கூடைகளுக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு அந்தப் பயணி, செல்லப் பிராணியான வெளிநாட்டு நாய் குட்டிகள் எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறினார்.

 

வனவிலங்கு பாதுகாப்பு குற்ற பிரிவு 





 

இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அவருடைய கூடைகளை திறந்து பார்த்து சோதனையிட்டனர். கூடைகளுக்குள் உயிருடன் கூடிய மலைப்பாம்பு குட்டிகள் நெளிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சுங்க அதிகாரிகள், அந்தக் கூடைகளை தனியே எடுத்து வைத்து ஆய்வு செய்தனர். அதோடு சுங்கத்துறையில் துணிச்சலான ஊழியர்கள் சிலரின் உதவியுடன், நடத்திய சோதனையில்,16 மலைப்பாம்பு குட்டிகள் இருந்தன. அதோடு நீல நிற உடும்புகள் 30 இருந்ததையும் கண்டுபிடித்தனர். மேலும் வெளிநாட்டு பெர்சியன் வகை அணில்கள் 4  இருந்தன.இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியையும் அவர் கொண்டு வந்த பாம்புகள் உடும்புகள் அணில்கள் அடங்கிய கூடைகளையும் ஒரு அறையில் வைத்து அடைத்து வைத்தனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள  வனவிலங்கு பாதுகாப்பு குற்ற பிரிவு போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

 

கொடிய விஷம் உடையவை இல்லை...

 

இதையடுத்து ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, அந்த உயிரினங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நீல நிற உடும்புகள் மத்திய, தென் அமெரிக்க வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படுபவைகள். இது விஷத்தன்மை உடையது. ஆனால் மனிதர்களை கொல்லக்கூடிய அளவு கொடிய விஷம் உடையவை இல்லை. வனப்பகுதிகளில் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. மேலும் பெர்சியன் வகை அணில்கள் ஈரான் மற்றும் மேற்காசிய வனப்பகுதிகளில் அதிகமாக உள்ளன. 36 சென்டிமீட்டர் நீளம் வளரக்கூடியவை.இவைகள் விஷமற்றவை. வனப்பகுதிகளில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவைகள். அதைப்போல் இந்த மலைப்பாம்பு குட்டிகள் அனைத்தும், வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளில், குளிர் பிரதேசங்களில் இருக்கக்கூடியவைகள், இவைகள் விஷமற்றவை. ஆனாலும் ஆபத்தானவைகள் என்பதை கண்டுபிடித்தனர்.

 

திருப்பி அனுப்ப முடிவு

 

அதோடு இந்த உயிரினங்களை கடத்தி வந்த கடத்தல் ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். அவர் இந்த உயிரினங்களை எதற்காக கடத்தி வந்தார் என்ற தகவலை முழுமையாக கூறவில்லை. மேலும் இந்த உயிரினங்களுக்கான, எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதனால் இந்த உயிரினங்களில் வெளிநாட்டு நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். இவைகளை நமது நாட்டுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள் பரவி, உயிரினங்கள் போன்ற விலங்குகள், மனிதர்களுக்கும் பல்வேறு நோய்கள் உருவாகும் ஆபத்து உள்ளது. எனவே இதை எந்த நாட்டில் இருந்து வந்ததோ? அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுங்கத்துறைக்கு அறிவுறுத்தினர். இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது செய்தனர். அதோடு இந்த விலங்குகளை மீண்டும் நாளை அதிகாலை சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும் தாய் ஏர்வேஸ் விமானத்தில், திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதற்கான விமான செலவுகள் அனைத்தையும், கடத்தல் ஆசாமியிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.