குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண்கள் சிலர் உயிரிழக்கும் சோகமான சம்பவங்கள் ஆங்காங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாடில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார்(35). இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வினோதினி (30)என்ற மனைவியும், சோனியா(5) மகளும், மோனிஷ்(2) என்ற மகனும் உள்ளனர். கடந்த 30-ஆம் தேதி இவருடைய மனைவி வினோதினிக்கு சின்னபோரூரிலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் 2 நாட்கள் கழித்து அவரை வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து, 3 தினங்களாக கடுமையான வயிற்று வலி மற்றும், சிறுநீர், மலம் வெளியேறாமல் இருந்துள்ளது. இதனால் வயிற்றுப்பகுதி வீக்கமடைந்ததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்ளை அனுகியுள்ளனர். பின்னர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார் வினோதினி. அவருக்கு பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
உறவினர்கள் கூறுவது என்ன?
அவருடைய மறைவிற்கு பிறகு அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் வினோதினி உயிரிழந்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அவர்கள், “சின்னப்போரூர் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் பொழுது கர்ப்பப்பைக்கு செல்லும் குழாயை தடை செய்யும் பொழுது, அருகில் இருக்கும் சிறுநீரக பாதை மற்றுப் மலம் வெளியேறும் பாதைக்கான குழாயை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை வெளியேறாமல், அந்த பாதையில் இருந்து கசிந்து, வயிறு முழுவதும் மலம் மற்றும் சிறுநீர் நிறைந்தது” என கூறியுள்ளனர்.
அதனால் தான் வயிற்றுப்பகுதி வீக்கமடைந்திருப்பதாகவும், இதன் காரணமாக குடல் பகுதி முழுவதும் அழுகியதுடன், கிட்னியும் செயலிழந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் உடற்கூறு ஆய்விற்கு தங்களது கையெழுத்து இல்லாமலேயே உடலை எடுத்துச்சென்றுள்ளதாகவும், இதில் தவறான அறிக்கை தயார் செய்ய முடியும் எனவும் சந்தேகம் எழுப்பியுள்ள உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த பெண்ணிற்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் மகனும் என 2 குழந்தைகள் உள்ளனர். இதனால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்