Chennai Road Accident: சென்னை வில்லிவாக்கம் பாடி தாதா குப்பம் பகுதியில் சாலை பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நடுவே உள்ள மீடியேட்டருக்கு பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மலர், அம்சவல்லி, மூர்த்தி, சத்யா, முருகேசன், ராதா, காமாட்சி, சசிகலா உள்ளிட்ட 8 ஒப்பந்த பணியாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். பொதுவாக சாலை பராமரிப்பு பணிகள் இரவில் நடைபெறும் என்பதால் இவர்களும் இரவில் பெயிண்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டனர். அப்போது விடியற்காலை 3 அளவில் சென்னை புழம் ரெட்டேரியில் இருந்து பாடி நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று வந்துள்ளது.


 கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் வந்த கார் அங்கே தொழிலாளர்கள் நிறுத்தி வைத்திருந்த மினிவேனில் மோதியது. அதிவேகமாக கார் வந்ததால், மினி வேனில் மோதியும் கார் கட்டுக்குள் வராமல் ஓடியுள்ளது. அப்போது அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும் மோதியது. கார் மோதியதால் 8 தொழிலாளர்களுமே தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சசிகலா, காமாட்சி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 6 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த வில்லிவாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர்.




மாணவர்கள் கைது!


 போலீசாரின் விசாரணையில் காரை ஓட்டி வந்தது கல்லூரி மாணவர் சுஜித் (19) என்பது தெரியவந்தது.  தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். ஈசிஆர் செல்வதற்காக கல்லூரி மாணவர் காரில் செல்லும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்துகின்றனர். இந்த விபத்து காரணமாக பாடி மேம்பாலத்தில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


சாலையில் கவனம்:


சென்னை போன்ற மாநகரங்களில் இரவு மற்றும் அதிகாலை விபத்துகளும் அதிகம் அரங்கேறுகின்றன


போக்குவரத்து நெரிசல் இல்லாத வெறும் சாலையை பார்த்ததும் அதிவேகமாக கார் ஓட்டுவதே விபத்துக்கு காரணமாகிறது


யாரும் இல்லாத சாலையாக இருந்தாலும் மிதமான வேகம், சிக்னல்களை மதித்தல் போன்றவை விபத்தை தடுக்கும்


இரவு, அதிகாலை நேரம் ஓட்டுநர்கள் தூக்கக்கலக்கத்தில் இருக்க வாய்ப்புள்ளது. அப்படி சோர்வாக உணர்ந்தால் வாகனத்தை ஓரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க வேண்டும்.