காவல்துறையினர் தொடர்ந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து வருவது அவர்களுடைய முக்கிய பணியாக இருக்கிறது. அவ்வாறு தொடர் குற்றங்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கும் காவலர்கள், அதுபோன்ற குற்றவாளிகள் மீண்டும் எந்தவித தவறும் செய்துவிடாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று காவல்துறையினர் புதிய ரவுடிகள் யாரும் உருவாகக்கூடாது எனவும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த வல்லாஞ்சேரி - கூடுவாஞ்சேரி சாலை உள்ள வீட்டில் சந்தேகப்படும் வகையில் நபர்கள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கூடுவாஞ்சேரி போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்த சென்ற போது அதில் இருந்த நபர்கள் தப்பியோடினர். இருவரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை மறைமலைநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள், 20 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள், இரண்டு பல்சர் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட இரண்டு பேரிடம் நடத்திய விசாரணையில் இருவரும் வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. தப்பியோடிய இருவரும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த டில்லி குமார் (23) ,அகஸ்டீன் (23) என்பதும், 4 பேரும் சேர்ந்து ஓட்டேரி பகுதியில் உள்ள சரித்திர குற்றவாளியான சிலம்பரசன் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட சிலம்பரசனை கொலை செய்தால் தங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும் என்ன இவர்கள் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. அவர்களை விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்