செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் கேளியம்மன் கோவில்,  பின்புறம் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக , நேற்று முன்தினம் மாலை, அப்பகுதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மூலம் கேளம்பாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேளம்பாக்கம்  காவல்துறையினர் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர், உயிரிழந்த நபர் யார் என்ன முதலில் விசாரணையை துவங்கினர். அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளையும், கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை துவங்கினர்.



 

உடனடியாக கேளம்பாக்கம் விசாரணையை துவங்கி பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்த நபர் ஶ்ரீராமலு தெருவை சேர்ந்த லட்சுமிகாந்த் (20) என்பது தெரியவந்தது. மேலும் லட்சுமிகாந்த் கையில் பிரதீப், சூர்யா என பச்சை குத்தப்பட்டு இருந்ததை வைத்து, அதே பகுதியை சேர்ந்த 20 வயதான பிரதீப் மற்றும் சூர்யாவை பிடித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. உயிரிழந்த லட்சுமிகாந்த், பிரதீப்குமாரின் காதலியை தவறாக பேசியதால் ஏற்பட்ட வாய் தகராறில் பிரதீப்குமார் பீர் பாட்டிலால் லட்சுமிகாந்தின் தலையில் அடித்துள்ளார். அப்போது லட்சுமிகாந்த் தப்பி ஓட முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததால், சதீஷ் கண்ணன் அவரின் தலையில் கல்லை போட்டுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து தாக்கியதில் லட்சுமிகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கேளம்பாக்கம் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். நண்பனின் காதலியை தவறாக பேசியதால், உயிருக்கு உயிராக பழகிய நண்பனே, தனது நண்பரை கொலை செய்திருக்க சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் காவல்துறையினர் விரைவாக விசாரணை மேற்கொண்டு , சம்பந்தப்பட்ட நபர்களை விரைவில் கைது செய்ததால் தாம்பரம் காவல் நிலையம் ஆணையர் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை பாராட்டினார்.



 

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபொழுது, நண்பர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்து வந்துள்ளனர். அப்போது உயிரிழந்த லட்சுமி காந்தன் பேச்சு வழக்கில் கொலை செய்தவர்களின் காதலி ஒருவரை தவறாக பேசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த நபர்கள், பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தனர்.