செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி அசோக் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வைத்து போலீசார் சுட்டு பிடித்தனர் 


ரவுடிகள் சாம்ராஜ்யம்


சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியில் இருப்பதால், தொடர்ந்து ரவுடிகளால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. 


சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும் சிறு நிறுவனங்கள், வியாபாரிகளை மையமாக வைத்து அவர்களை மிரட்டி மாமுல் வாங்குவதை, இந்த ரவுடிகள் முக்கிய வேலையாக செய்து வருகின்றனர். இதுபோக கஞ்சா விற்பது, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ரவுடிகள் ஈடுபட்டு வருகின்றனர். 


சிக்கி தவிக்கும் செங்கல்பட்டு


ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர், ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்து, சிறையில் அடைக்கும் பணியில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருகிறது.


செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி அசோக் (28). அசோக் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறையினரால் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அசோக் இருந்து வருகிறார். இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஆப்பூர் வனப்பகுதியில், பதுங்கி இருந்த அசோக்கை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது அசோக். அங்கிருந்த காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். 


போலீசாரத் துப்பாக்கி சூடு


இதனைத் தொடர்ந்து அசோக்குமார் தப்பிக்காமல் இருப்பதற்காகவும், தற்காப்பிற்காகவும் போலீசார் அசோக் கால் முட்டிக்கு கீழ் சுட்டு பிடித்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடி கொண்டிருந்த, அசோக்கை மீட்ட போலீசார் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அசோக் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அசோக்கிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது: அதிக அளவில் கஞ்சா விற்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பதுங்கி இருந்த அசோக்கை கைது செய்ய சென்றோம். அப்போதுதான் எங்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தார்.


பிரபல ரவுடி அசோக்கின் பின்னணி என்ன ?


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் அசோக். அசோக் மீது நாட்டு வெடிகுண்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், திருப்போரூர் பகுதியில் இவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் எதிர்பாராத விதத்தில், படித்ததில் அவருடைய ஒரு கண் பார்வை முற்றிலும் செயல் இழந்தது. அந்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க அசோக் கற்றுக்கொண்டார். நாட்டு வெடிகுண்டு செய்வதில், கை தேர்ந்த ரவுடியாக அசோக் இருந்து வருகிறார். குட்டி ரவுடிகள் முதல் பெரிய ரவுடிகள் வரை என அனைவருக்கும் பரிச்சயமாக அசோக் இருந்து வருகிறார். பல முக்கிய கொலைகளுக்கு பின்னணியில், அசோக் செய்த நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதுமே அசோக்கை போலீசார் தங்கள் கண்காணிப்பிலே வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.