செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த, கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் மேலக்கோட்டையூர் என்ற பகுதியில், தமிழ்நாடு உடற்கல்வியில் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மற்றும் மாணவியர்கள் படித்து வருகின்றனர். விளையாட்டுத்துறைக்கு என இருக்கும் மிக முக்கிய பல்கலைக்கழகமாக இது இருந்து வருகிறது.
ஆசிரியர் மற்றும் மாணவி உறவு
அந்த வகையில் இந்த பல்கலைக்கழகத்தில், நாமக்கல் பகுதியில் சேர்ந்த ராஜேஷ்குமார் (45) இவர் பல்கலைக்கழக உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பல்கலைக்கழகம் அருகே உள்ள, குடியிருப்பில் வசித்து வருகிறார். இதே பல்கலைக்கழகத்தில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சென்னையை சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பணியாற்றி வரும் ராஜேஷ்குமார் மற்றும் கல்லூரி மாணவி இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருடைய பழக்கம் நாளடைவில் எல்லை மீற தொடங்கியுள்ளது. ஓராண்டுக்கு மேலாக இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதன் விளைவாக கல்லூரி மாணவி இரண்டு மாதம் கர்ப்பம் ஆகியுள்ளார்.
கருவை கலைக்க முடிவு
மாணவி கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிந்தால், இருவருக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும் என்பதால், கருவை கலைக்க ராஜேஷ்குமார் முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருப்போரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், கருக்கலைக்க அழைத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் மாணவிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட தொடங்கியுள்ளது.
இதனை அடுத்து மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், இதில் பிரச்சனை இருப்பதை தெரிந்து கொண்டு, உதவி பேராசிரியர் ராஜேஷ் குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்ததால், உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு பதிவு செய்த போலீஸ்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாழம்பூர் காவல்துறையினர், ராஜேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவியை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ராஜேஷ்குமாரை கைது செய்த போலீசார், மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்களுக்கு நல்வழியை போதிக்க வேண்டிய ஆசிரியரே, மாணவியை கர்ப்பம் ஆக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.