சகோதரர்கள் இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் அண்ணணை நாட்டு துப்பாக்கியால் சுட்டு தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அடுத்த கொத்திமங்கலம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மோகன் என்பவரின் மகன்கள் வெங்கடேசன் மற்றும் சந்திரன் ஆவர். சந்திரன் மற்றும் வெங்கடேசன் இருவருக்கும் இடையே நிலப் பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவு சந்திரன் மற்றும் வெங்கடேசனுக்கும் சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் தம்பி சந்திரன் நாட்டுதுப்பாக்கியால் சுட்டதில் மார்பு பகுதியில் படுகாயமடைந்த அண்ணன் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த சந்திரனை கைது செய்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, சிறு சிறு பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கியை அவர்கள் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அடிக்கடி இருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட இருவரும் மது போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. மதுபோதையில் தகராறு செய்யும் பொழுது அண்ணனை தம்பி துப்பாக்கியால் சுட்டதாக தம்பி ஒத்துக் கொண்டுள்ளார். இதற்காக பயன்படுத்த துப்பாக்கியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.