செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள காட்டு கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சேகர் (50) ராணி  (42). இவர்கள் இருவரும் கணவன் மனைவி ஆவர். இவருடைய பேத்தி அக்ஷயா (4) ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் ஆலப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நள்ளிரவு வீட்டுக்கு வரும்பொழுது, செண்டிவாக்கம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து பலியானார்கள்.

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா பாட்டி மற்றும் பேத்தி ஆகிய மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் சரிவர மின்விளக்குகளும் இல்லை என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மேல்மருவத்தூர் காவல்துறையினர் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து உயிரிழந்த மூன்று பேரின் உடல்நிலை கைப்பற்றிய மேல்மருவத்தூர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த கோர விபத்து அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாலே நடைபெற்று இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர், தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்றதாக ,காவல் துறையினர் நள்ளிரவு 11 இல் இருந்து ஒரு மணி வரை கணித்துள்ளனர்.  அதன் அடிப்படையில் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலை மற்றும் மேல்மருவத்தூர் வந்தவாசி சாலை ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள சிசி டிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.