செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் 13 வயது சிறுமி, தனது தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டிற்கு தண்ணி கேன் போட வரும் இளைஞர் ஒருவர் சிறுமியை காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். தொடர்ந்து பலமுறை சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.

சிறுமியை வீடியோ எடுத்து

ஒரு கட்டத்தில் சிறுமிக்கு தெரியாமல் வீடியோ எடுத்து, அதனை தன் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி, ஏழு சிறுவர்கள் மற்றும் ஐந்து நபர்களுடன் சேர்ந்து அவ்வப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனால் ஒரு கட்டத்தில் சிறுமி, மனதளவில் கடுமையாக பாதிப்படைந்து அவதி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாயார் அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர்.

காவல்துறையில் புகார் 

உடனடியாக சிறுமியின் தாய் பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் மற்றும் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த நந்தகுமார் (19), சஞ்சய் (19), எஸ்.சஞ்சய் (18), முடிச்சூரை சேர்ந்த சூர்யா (22), பல்லாவரத்தை சேர்ந்த நிக்சன் (22) உள்பட 12 பேரை கைது செய்தனர். 

இது தொடர்பாக, போக்சோ உள்பட பல்வேறு குற்ற பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 7 சிறுவர்களை அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் சஞ்சய், சூர்யா, நந்தகுமார், நிக்சன், எஸ்.சஞ்சய் ஆகிய 5 பேரையும் விசாரணைக்காக போலீசார் காவலில் எடுத்தனர். 

செங்கல்பட்டில் வைத்து விசாரணை 

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் வைத்து விசாரித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் சூழ்ந்து கொண்டு விசாரணை செய்யவிடாமல் தடுப்பார்கள் என காவல்துறையினருக்கு தகவல் வெளியாகியது. எனவே காவல்துறையினர் ரகசியமாக, காஞ்சிபுரம் ஐஜி மேற்பார்வையில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி மற்றும் திருவள்ளூர் மாவட்ட டி.எஸ்.பி தலைமையில் தீவிரமாக விசாரித்தனர்

காவல்துறையினர் காவலில் விசாரணை முடிந்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே 5 பேரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டபோது, இன்ப சுற்றுலாவுக்கு செல்வது போல் ஜாலியாக சிரித்தபடி விசாரணைக்கு வந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்று சிறுமிகள் மற்றும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர்களுக்கு நீதிமன்றம் பாரபட்சமின்றி மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.