பாகிஸ்தான் உதவியோடு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு சிபிஐ மூவரைக் கைது செய்துள்ளது. இதில் இருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் டெல்லியைச் சேர்ந்தவர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் விசாரணை நடத்தவுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. 


ஐபிஎல் மேட்ச் பிக்சிங் குறித்து செய்யப்பட்டிருக்கும் வழக்குப் பதிவின் முதல் தகவல் அறிக்கையில், `பாகிஸ்தான் நாட்டில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஐபிஎல் போட்டிகளின் முடிவுகளில் மாற்றம் செய்யும் குழு ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிபிஐ அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது’ எனக் கூறப்பட்டுள்ளது. 


டெல்லியின் ரோகிணி பகுதியைச் சேர்ந்த திலீப் குமார், ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ரம் வாசு, குர்ரம் சதீஷ் ஆகியோரைக் குற்றவாளிகளாகவும் சிபிஐ இந்த முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இந்தக் குழு செயல்பட்டு வருவதாகவும், மக்களைச் சூதாட்டத்தில் ஈடுபட வைத்து மோசடி செய்து வந்ததாகவும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் பல்வேறு வங்கிக் கணக்குகளைப் போலி அடையாளங்களுடன் வைத்திருப்பதாகவும், பெயர் தெரியாத பல வங்கி அதிகாரிகளின் உதவியோடு இவற்றை நடத்தி வருவதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


மேலும், இந்த முதல் தகவல் அறிக்கையில், `இந்த வங்கிக் கணக்குகள் வெவ்வேறு பிறந்த தேதிகள் முதலான போலியான தகவல்களைச் சமர்பித்து திறக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தால் இவ்வாறு நிகழ்ந்துள்ளன. இந்தியாவின் பொது மக்களிடம் சூதாட்டம் மூலமாக பெறப்படும் பணத்தில் ஒரு பகுதியை சட்டவிரோதமாக அந்நியச் செலாவணி மேற்கொள்ளவும் வெளிநாடுகளில் வாழும் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர்’ எனவும் கூறப்பட்டுள்ளது. 


மேலும், சிபிஐ அதிகாரிகள் தரப்பில் இந்த வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணப் பரிவர்த்தைகள் பெரும்பாலும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இவை கிரிக்கெட் சூதாட்டம் முதலான பல்வேறு குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 



டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களைப் போலவே, ராஜஸ்தான் மாநிலத்திலும் சிபிஐ இதே கிரிக்கெட் சூதாட்டம் விவகாரத்தில் நால்வரைக் கைது செய்துள்ளது. இந்தக் கும்பலும் பொது மக்களிடம் சூதாட்டம் மூலம் பெறப்படும் பணத்தை அந்நியச் செலாவணிக்காக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.


ராஜஸ்தானில் சிபிஐ தரப்பில் சிங், மீனா, ராம் அவதார், ஷர்மா ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அவர்களை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அவர் மூலமாக இந்தியாவில் பலரையும் +9233222226666 என்ற பாகிஸ்தான் எண்ணைப் பயன்படுத்தி அவர்களுடன் பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.