ராமஜெயம் கொலை வழக்கு

தமிழக அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து அதிகாலை வாக்கிங் சென்ற போது மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தின் கொலைக்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என கடந்த 13 வருடங்களாக பல கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. முதலில் போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு கிடைக்காததால்,  சி.பி.சி.ஐ.டிக்கும் அதன் பின் சி.பி.ஐக்கும் வழக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை வேகமெடுத்தது.

Continues below advertisement

13ஆண்டுகளாக தொடரும் சோதனை

சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கு மீண்டும் மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்திற்குரிய 12 ரவுடிகளை தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அடுத்ததாக ராமஜெயம் கொலை வழக்கை டி.ஐ.ஜி வருண் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டு  விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிசிஐடி டிஐஜி யாக இருக்கக்கூடிய வருண் குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து களத்தில் இறங்கிய வருண்குமார், தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட முக்கிய ரவுடிகளிடம் ராமஜெயம் கொலை தொடர்பாக நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.  இந்த பரபரப்பான நிலையில் திருச்சியில் பிரபலமான பாலக்கரை அருகே உள்ள காவேரி திரையரங்கில் திடீரென விசாரணை நடத்தினார். 

திரையரங்கில் திடீர் சோதனை

இந்த விசாரணையின் போது திரையரங்க உரிமையாளரிடமும், திரையரங்கில் பணி புரியும் ஊழியர்களிடமும் பலவித கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராமஜெயம் கொலை நடந்த சமயத்தில் அந்த திரையரங்கம் சசிகலாவின் உறவினர் ஒருவருக்கு சொந்தமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பலர் கைக்கு திரையரங்கம் மாறியுள்ளது. எனவே கொலை நடந்த சமயத்தில் திரையரங்கில் வைத்து சதி திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. எனவே ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த 13ஆண்டுகளாக நீடித்து வந்த மர்மம் எப்போது முடிவுக்கு வரும் என திமுகவினர் மட்டுமல்ல தமிழக மக்களும் காத்துள்ளனர். 

Continues below advertisement