மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அளக்குடி கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் வீரமணியின் மகன் அண்ணாதுரை. இவரின் பசு மாடு அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி, மன்மதன், சுபாஷ், கார்த்திக் உள்ளிட்டோருக்கு சொந்தமான வயலில் தொடர்ந்து  பல நாட்களாக மேய்ந்து வந்ததாகவும், இதுகுறித்து அண்ணாதுரையிடம் பலமுறை கூறியும் மீண்டும் மீண்டும் வயலில் மேய்ந்ததால் பசு மாட்டை பிடித்து இரண்டு காதுகள் மற்றும் வால் பகுதி அரிவாளால் வெட்டி துண்டித்து மாட்டை அடித்து விரட்டியுள்ளனர். இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட பசு அண்ணாதுரை விட்டுக்கு வந்துள்ளது. 




இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். அதனைத் தொடர்ந்து தனது மாட்டின் காது மற்றும் வாலை வெட்டியது தொடர்பாக வயலின் உரிமையாளர்கள் 4 பேர் மீது ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த  ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாட்டின் காதுகளை வெட்டிய வயலின் உரிமையாளர்களான ரவி, மன்மதன் உள்ளிட்ட இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து  விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சுபாஷ் மற்றும் கார்த்திக் இருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் காயமடைந்த பசு மாட்டிற்கு சாமியம் கால்நடை மருத்துவமனை சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். 



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


 


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பசு மாடு என்பது ஐந்தறிவு ஜீவன் அதற்கு வயல்வெளி, தோட்டம் என்ற பாகுபாடெல்லாம் தெரியாது, மாடு தொடர்ந்து வயலில் மேய்கிறது என்றால், அதுகுறித்து மாட்டின் உரிமையாளர் தெரிவித்து அப்போதும் நடவடிக்கை இல்லை என்றால், அது தொடர்பாக அதிகாரிகளிடம் அல்லது காவல் துறையிடம் புகார் அளித்திருக்கலாம், அதனை விடுத்து ஐந்தறிவு ஜீவன் என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி  பசுவின் காதுகளையும், வாலையும் துண்டித்து மனிதாபிமான இன்றி நடந்துகொண்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.