நடிகை மீராமிதுன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் விதமாக காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். மேலும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் சார்பில் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
வன்னியரசு அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை மீராமிதுன் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,நடிகை மீரா மிதுன் மீது மதுரை மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நேற்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது,
நடிகை மீராமிதுன் அண்மையில் வெளியிட்ட காணொலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த சினிமா இயக்குநர்களையும், பட்டியல் சாதியினரையும் குற்றவாளிகள், திருடர்கள் எனக் கொச்சைப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் வசிக்கக்கூடிய கோடிக்கணக்கான பட்டியலின மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக, சமூக பதற்றத்தை உருவாக்கும் விதமாக பேசியுள்ளார்.
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் இருவர் மீதும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், சமூக வலைதளங்களில் இதுபோல சாதிய வன்மப்பேச்சுக்கள் நிகழாதவாறு தடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். முன்னதாக, தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார். பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு சர்ச்சைகளுக்குரிய கருத்துக்களை தெரிவித்து தமிழ்நாட்டில் பிரபலமானார்.
மேலும், நடிகர் சூர்யா, நடிகர் விஜய், நடிகை ஜோதிகா உள்பட பலரையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து, சமூக வலைதளங்களில் அவர்களின் ரசிகர்களின் கடுமையான கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகைகள் நயன்தாரா, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் தன்னை போன்றே மேக்கப் செய்து கொள்வதாக கூறியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைதளங்களில் அவர் தொடர்ந்து ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து வருவதால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.