ஆன்லைன் டேட்டிங் ஆப்பில் சந்தித்து பேசி பழகி காதலில் விழுந்த கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது பிரிட்டன் காதலனைச் சந்திக்க நாடு விட்டு நாடு சென்று சந்தித்த நிலையில், தனது காதலனால் சராமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கனடா நாட்டைச் சேர்ந்த ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த் எனும் 19 வயது இளம் பெண் தான் ஆன்லைன் டேட்டிங் ஆப்பில் சந்தித்து காதலித்த பிரிட்டனைச் சேர்ந்த 23 வயது ஜாக் செப்பலே என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கனடா மற்றும் பிரிட்டன் நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி கனடா நாட்டைச் சேர்ந்த ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த்தின் உடல், டென்னிசன் ரோடு, செல்ம்ஸ்போர்டில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் பிணமாக பிரிட்டன் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. போலீசாரின் தொடர் விசாரணையால், பிணமாக இருப்பவர் கனடா நாட்டைச் சேர்ந்த ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த் என்பது தெரிய வந்தது. 19 வயதான ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த் பிரிட்டனுக்கு ஆறு மாதகால சுற்றுலா விசாவில் வந்திருப்பதும் போலீசாரின் தொடர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் கொலை செய்தது யார் என தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தியதில், கனடாவில் இருந்து பிரிட்டன் வந்த ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த், ஆன்லைன் டேட்டிங் ஆப்பில் சந்தித்து பேசி, மனதை பறிகொடுத்து காதலிக்க தொடங்கிய பிரிட்டனைச் சேர்ந்த ஜாக் செப்பலே என்பவரை சந்திக்க வந்திருப்பது தெரியவ்ந்துள்ளது. இதனை இவரது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து பிரிட்டன் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்குப் பிறகு ஜாக் செப்பலேவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் விசாரணையின் தொடக்கத்தில் ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த்தை தான் கொலை செய்யவில்லை என கூறிவந்த ஜாக் செப்பலே தொடர்ந்து கொலை குற்றத்தினை ஒப்புக்கொள்ளாமல் மறுத்து வந்தார். போலீசாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஜாக் செப்பலே, பின்னர் விசாரணைக்கு ஒத்துழைத்து உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். விசாரணையின் முடிவில், ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த் தனது காதலி என்றும், இருவரும் ஒரு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி, பேசி பழகி காதலிக்க தொடங்கினோம் என்றும் கூறியுள்ளார். மேலும், தன்னைச் சந்திக்கத்தான் ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த் கனடாவில் இருந்து பிரிட்டன் வந்ததாகவும் கூறியுள்ளார்.
பிரிட்டனுக்கு வந்த ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த்துடன் இணைந்து சுமார் ஐந்து மாத காலம் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், கொலை நடந்த தினத்தில் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாகவும், முதலில் வாக்குவாதமாக இருந்த சண்டை பின்னர் மிகவும் மோசமாக மாறியதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் தான் கோபத்தின் உச்சத்திற்குச் சென்றதாகவும் அதனால் அவரை கத்தியால் சராமாறியாக குத்திக் கொலை செய்தேன் என்றும் கூறியுள்ளார். முழுமையான விசாரணை முடிவுக்கு வந்த பின்னர், ஜாக் செப்பலே பிரிட்டனில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
விசாரணையின்போது கலந்துகொண்ட ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த்தின் குடும்பத்தினர், ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த் ஒரு நல்ல திறமையான பெண் என்றும், அவர் மிகவும் நகைச்சுவையான பெண்மணி என்றும் கூறினர். மேலும் ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த்தின் தாத்தா, நான் தான் ஆஷேலி வோர்ட்ஸ்வொர்த்தை இங்கிலாந்துக்குச் செல்ல ஊக்குவித்தேன். உலகின் மிகவும் பாதுகாப்பான நாடு என்று நம்பி அனுப்பினேன், ஆனால் நாங்கள் இப்போது ஒரு பேரழிவைச் சந்தித்துள்ளோம் என்று கூறினார்.