மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் என்பவரின் மகன் 21 வயதான பானுஸ்ரீதர். கல்லூரி இளங்கலை பட்டம் முடித்துவிட்டு, சென்னையில் கம்யூட்டர் கோர்ஸ் ஒன்று படித்து வந்தார். சென்னையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு பரசலூர் வந்த பானுசேகர், கடந்த திங்கள்கிழமை வேப்பஞ்சேரி என்ற பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்றவர் அதன்பின்னர் மாயமாகியுள்ளார். இதுகுறித்து பானுஸ்ரீதரின் தாயார் கஸ்தூரி பொறையார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.




விசாரணையில் பானுஸ்ரீதர் கடற்கரை வழியே புதுப்பேட்டை வரை நடந்து சென்றது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பானுஸ்ரீதரின் உடல் சந்திரபாடி கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த தரங்கம்பாடி கடலோர காவல் நிலையம் மற்றும் பொறையார் காவல் நிலைய காவல்துறையினர் பானுஸ்ரீதரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இளைஞர் உயிரிழப்பில் சந்தேகம்


இந்நிலையில் பானுஸ்ரீதரின் உடலில் காயங்கள் உள்ளதாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை. அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் உடல்கூறு ஆய்வு செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி இன்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தீடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த சூழலில் பானுஸ்ரீதர் திருக்கடையூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்தநிலையில், அந்தப் பெண் திடீரென பானுஸ்ரீதரை நிராகரித்துவிட்டு, வேறு ஒரு இளைஞரை காதலித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.




இதனால், பானுஸ்ரீதர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'முதலும் நீ முடிவும் நீ" என்று காதலியியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு திருக்கடையூர் வேப்பஞ்சேரி பகுதிக்கு சென்றவர், தற்போது சடலமாக மீட்கப்பட்டதாகவும், பானுசேகரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மயிலாடுதுறை மருத்துவமனை முன்னர் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை  காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) கலைகதிரவன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடற்கூராய்வு முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. இந்த  திடீர் சாலைமறியல் போராட்டத்தால் மருத்துவமனை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெற..


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)