11 மாத பச்சிளங் குழந்தையை கொன்ற தாய்! உடலை ரயில் நிலையத்தில் வீசிய கொடூரம் - நடந்தது என்ன?
கேரளாவில் 11 மாத குழந்தையை கொலை செய்து உடலை ரயில் நிலையத்தில் தாயே வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் அமைந்துள்ளது திரூர் பகுதி. இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களாக ஸ்ரீப்ரியா என்ற பெண் ( வயது 30) வசித்து வந்தார். இவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் மணிபாலன். இந்த தம்பதியினருக்கு 11 மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது.
காதல் விவகாரம்:
மணிபாலனுக்கும் ஸ்ரீபிரியாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து உள்ளனர். இதன் காரணமாகவே ஸ்ரீபிரியா மலப்புரத்தில் தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவரும் ( வயது 34) வசித்து வந்துள்ளார்.
ஜெயசூர்யாவிற்கும் ஸ்ரீப்ரியாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அதே பகுதியில் வசித்து வந்ததால் தனியாக வீடு ஒன்று எடுத்து தங்கியுள்ளனர். கணவன் மனைவியாக அதே வீட்டில் ஜெயசூர்யா – ஸ்ரீப்ரியா வசித்து வந்துள்ளனர்.
மாயமான குழந்தை:
இந்த நிலையில், மலப்புரத்திற்கு வேறொரு பணி காரணமாக சென்ற ஸ்ரீப்ரியாவின் உறவினர் ஸ்ரீப்ரியாவை பார்த்துள்ளார். அப்போது, ஸ்ரீப்ரியா ஜெயசூர்யாவுடன் இருந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ஸ்ரீப்ரியாவிடம் அவரது குழந்தை எங்கே? என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீப்ரியா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால், அவரது உறவினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே திரூர் காவல் நிலையத்திற்கு சென்று இதுதொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் திரூர் போலீசார் ஜெயசூர்யா, ஸ்ரீப்ரியா இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் குழந்தையை பற்றி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
கொலை செய்த தாய்:
போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் அதிர்ச்சிகரமான தகவலை இருவரும் கூறியுள்ளனர். இருவரும் ஒன்றாக வாழ்வதற்கு அவர்களது 11 மாத குழந்தை இடையூறாக இருப்பதாக இருவரும் கருதியுள்ளனர். ஆனால், பச்சிளங் குழந்தை என்றும் பாராமல் அந்த குழந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, அந்த ஆண் குழந்தையை கொலை செய்து திருச்சூரில் உள்ள ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியில் குழந்தையின் உடலை வீசியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து திருர் பகுதிக்கு வந்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு ஜெயசூர்யாவின் தந்தை மற்றும் தாய் இருவருமே உடந்தையாக இருந்துள்ளனர் என்பதையும் கேட்டு போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தனது காதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி பச்சிளங்குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.