கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவராக உதயகுமார் என்பவர் இருந்து வருகிறார். இவரது உறவினரின் ஆட்டுக்குட்டி சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்துள்ளது. இதுகுறித்து புகார் மனு அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக அரவக்குறிச்சி பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் உதயகுமார் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பேசிக் கொண்டிருந்த போது காவல் துறையினருக்கும், உதயகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உதயகுமார் காவல் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில், அரவக்குறிச்சி போலீசார் உதயகுமார் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத ரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து உதவியகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
குளித்தலை அருகே தோகைமலை பகுதியில் போலி துப்பாக்கி மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிபறியில் ஈடுபட்ட கீழவெளியூர் காலனியைச் சேர்ந்த 4 இளைஞர்களை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் , ஆவுடையார்கோவில் அருகே இளையமங்கலத்தை சேர்ந்த ராஜரத்தினம் மகன் மதன்குமார் என்பவர் கரூர் மாவட்டம், தோகைமலை சின்னரெட்டிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது, 4 இளைஞர்கள் கத்தி, துப்பாக்கி மற்றும் அரிவாள் என பயங்கர ஆயுதங்களுடன் மதன்குமாரை வழிமறித்து, மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தோகைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தலைமையில் போலீசார் சென்று பயங்கர ஆயுதங்களுடன் வழிபறியில் ஈடுபட்ட 4 இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்து நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் தோகைமலை அருகே உள்ள கீழவெளியூர் காலனியை சேர்ந்த சாரதி (எ) சரத்குமார், அருண்குமார், பூபாலன், வசந்த் என்பது தெரியவந்தது. இவர்களில், சாரதி (எ) சரத்குமார் என்பவர் மீது கஞ்சா கடத்தல் என பல்வேறு வழக்குகள் உள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. 4 பேரையும் கைது செய்த தோகைமலை போலீசார் குளித்தலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.