கர்நாடகாவில் பட்டபகலில் ஏடிஎம் வாகனத்தை மறித்து 7 கோடி மதிப்பிலான பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

எப்படிப் நடைபெற்றது கொள்ளை?

கர்நாடகா, பெங்களூருவின் சித்தாபுரா அருகே உள்ள ஏடிஎம்மிற்கு பணம் ஏற்றுவதற்காக ஜே.பி. நகர் தனியார் வங்கியிலிருந்து சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் நிறுவன வாகனம் 7.11 கோடி ரூபாய் பணத்துடன் புறப்பட்டது.ஒட்டுநர் வினோத் குமார், கேஷ் லோடிங் ஸ்டாஃப், இரு ஆயுத பாதுகாவலர்கள் என நால்வர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர்.

‘Government of India’ ஸ்டிக்கர் கொண்ட கார் வழிமறிப்பு

பணம் ஏற்றிக்கொண்டு சென்ற அந்த வாகனத்தை டேரி சர்க்கிள் மேம்பாலம் அருகே திடீரென ‘Government of India’ ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று நிறுத்தியுள்ளது. அந்த காரில் இருந்து முறையாக ஆடையணிந்த மர்ம நபர்கள் இறங்கி, “நாங்கள் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள்… எடுத்துச் செல்லும் பணத்தின் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்” என்று கேட்டுள்ளனர்.

Continues below advertisement

துப்பாக்கி முனையில் கடத்தல்

சில நொடிகளில் அங்கு நிலைமை தலைகீழாக மாறியது. ‘ஆர்பிஐ அதிகாரிகள்’ என்று வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் சி.எம்.எஸ் வாகனத்தையும் அதில் இருந்த நால்வரையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பின்னர் 7.11 கோடி ரூபாய் பணம் இருந்த சி.எம்.எஸ் வாகனத்தை டேரி மேம்பாலத்தில் ஓரமாக நிறுத்தி, பணத்தை தங்களது காரில் மாற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

மர்ம கும்பல் பாதுகாவலர்களின் கையிலிருந்த இரண்டு துப்பாக்கிகளையும் பறித்துக்கொண்டு சென்றாலும், சில தூரம் சென்றபின் அதை சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஓட்டுநரின் தாமதமான தகவல்… 

முக்கியமாக, சம்பவம் நடந்த உடனடியாக தெரியப்படுத்தாமல், சி.எம்.எஸ் வாகன ஓட்டுநர் ஒரு மணி நேரம் கழித்து தான் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.இதுவே போலீசாருக்கு புதிய சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. கொள்ளையர்களை எதிர்த்து எந்த வித எதிர் தாக்குதலை நடத்தாமல், பாதுகாவலர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை என்பதும் விசாரணையின் முக்கிய கோணமாக மாறியுள்ளது.

 தேடுதல் வேட்டை

தகவல் கிடைத்ததும் டேரி சர்க்கிள் மேம்பாலம் முழுவதும் போலீசார் முற்றுகையிட்டு விசாரணை தொடங்கினர்.கொள்ளையர்கள் பயன்படுத்திய காரை அடையாளம் காண பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு நகரம் முழுவதும் தீவிர ‘தேடுதல் வேட்டைதொடர்ந்து வருகிறது.

சி.எம்.எஸ் வாகனத்தில் இருந்த ஓட்டுநர், ஸ்டாஃப், இரு பாதுகாவலர்கள் என நால்வரிடமும் தற்போது போலீசார்  தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்

பட்டப்பகலில் 7 கோடி கொள்ளை – பெங்களூரில் அதிர்ச்சி!

 பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரக் கொள்ளை, கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொள்ளையர்களை விரைவில் கைது செய்வோம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது