மனைவியை கொலை செய்ய முயன்றபோது அவர் கத்தியதால் அவர் வாயை கணவர் பசை போட்டு ஒட்டிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.  


பெங்களூருவில், தனது மனைவியை பசை குடிக்க வைத்து கொலை செய்ய முயன்றதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பெங்களூருவின் புறநகரில் உள்ள தசனபுராவில் வசிப்பவர் சித்தலிங்கசாமி. இவர் தனியார் நிறுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரின் சொந்த ஊர் ராய்ச்சூர். இவரது மனைவி மஞ்சுளா. இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் சித்தலிங்கசாமியின் சொந்த ஊரான ராய்ச்சூரில் படித்து வருகின்றனர்.


இதைத்தொடர்ந்து கணவர் மனைவி இருவரும் வீட்டில் தனியாத்தான் இருக்கிறார்கள். இதனிடையே மனைவி மஞ்சுளா ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார். அவர் அடிக்கடி போனில் யாருடனோ பேசி வந்ததாக கணவருக்கு சந்தேகம் எழுந்தது.


இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்த வண்ணம் இருந்துள்ளது. கடந்த 11ஆம் தேதியும் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.


இதில் ஆத்திரமடைந்த கணவர் சித்த லிங்க சாமி, மனைவி மஞ்சுளாவின் கழுத்தை பிடித்து நெரித்து கொல்ல முயன்றுள்ளார். அப்போது மஞ்சுளா கத்தி சத்தம் போட்டுள்ளார்.


இதனால் கணவர் லிங்க சாமி வீட்டில் இருந்த ஃபெவி குயிகை மஞ்சுளாவின் வாயில் ஊற்றி ஒட்டினார். இதனால் மஞ்சுளா துடிதுடித்து போனார். இதைஅடுத்து அவர் மஞ்சுளாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தார். அதற்குள் மஞ்சுளா ஏற்கெனவே கத்திய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர்.


இதைப்பார்த்த அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வீட்டில் வந்து பார்க்கும்போது மஞ்சுளாவின் வாய் பசையால் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் கழுத்தில் கொலை முயற்சி நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தன.


இதைத்தொடர்ந்து போலீசார் மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில் மஞ்சுளா செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும் அதனால் அவர் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவர் இவ்வாறு செய்ததாகவும் தெரியவந்தது.


இந்நிலையில், மனைவியை கொல்ல முயன்ற கணவரை மாதநாயக்கன்ஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.