Viral Video: காரில் அதிவேகமாக சென்று இருசக்கர வாகனத்தை மோதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
கொடூர கொலை:
பெங்களூருவில் சிறிய சாலை விபத்தால் ஏற்பட்ட பிரச்னையால், இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய குற்றவாளிகளாக மனோஜ் குமார் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சர்மா ஆகியோர் அடையாளப்படுத்தப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 25ம் தேதி இரவு புட்டனஹல்லி பகுதியில் இந்த கோர விபத்து அரங்கேற்றப்பட்டுள்ளது. தற்போது அதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளன.
விபத்துக்கான காரணம் என்ன?
தர்ஷன் எனும் இளைஞர் தனது நண்பர் வருண் என்பவரை பின்புறம் அமர்த்தியபடி, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, மனோஜ் மற்றும் ஆர்த்தி ஆகியோர் பயணித்துக் கொண்டிருந்த காரின், பக்கவாட்டு கண்ணாடியின் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். இந்த சிறிய விபத்தானது, கொலையில் முடிவடைந்துள்ளது. காவல்துறையின் விசாரணையின்படி, முதலில் அந்த பைக்கை மனோஜ் தவறவிட்டுள்ளார். அதன் பிறகு U-டர்ன் எடுத்து துரத்திச் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து முகத்தில் மாஸ்க் அணிந்தபடி சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு உடைந்து கிடந்த காரின் பாகங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் தப்பிச் சென்றுள்ளனர்.
வீடியோ வைரல்:
விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராகவில் அந்த சம்பவம் ஒட்டுமொத்தமாக பதிவாகியுள்ளது. அதன்படி, தனது நண்பருடன் சேர்ந்து தர்ஷன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்க, அவரை பின் தொடர்ந்து அதிவேகமாக வந்த மனோஜ் தனது காரால் முட்டி மோதியுள்ளார். இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் சறிந்து விழுந்து சாலையோரம் இருந்த சுவற்றில் சென்று முட்டியுள்ளனர். அதேநேரம், கண்ணிமைக்கும் நேரத்தில் மனோஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த விபத்தில் வருண் படுகாயமடைந்த நிலையில், தர்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் டெலிவெரி பாய் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல்துறை விசாரணை:
முதலில் இதனை வழக்கமான சாலை விபத்தாகவே போலீசார் கருதியுள்ளனர். ஆனால், சிசிடிவி காட்சிகளை ஆய்வுய் செய்தபோது கிடைத்த தகவலின்படி, பின்பு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மனோஜ் தற்காப்பு கலை பயிற்சியாளர் என்பது கூடுதல் தகவல்.