தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவை சேர்ந்தவர் தங்கம். இவர் இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்க பாலம் அருகே பாத்திரகடை மற்றும் இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் கடையில் அமர்ந்து இருந்த போது டிப் டாப் உடையணிந்த 6 பேர் கடைக்கு வந்து தாங்கள் போலீஸ் என்றும், திருட்டு பொருட்கள் வாங்கியது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளதாக கூறியுள்ளனர். இதற்கு தங்கம் மறுக்கவே வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஒரு இனவோ காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
கரூர் டோல்கேட் அருகே சென்றதும் 20 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவோம், இல்லை என்றால் கைது செய்து அடைத்துவிடுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் தங்கம் மறுத்துள்ளனர். இறுதியில் 5 லட்ச ரூபாய்க்கு பேசி முடித்துள்ளனர். இதையடுத்து தங்கம் தனது மகன் பணத்தினை எடுத்து வரச்சொல்லி உள்ளார். விருதுநகர் அருகே பணத்தை கொடுத்து பிறகு அந்த கும்பல் தங்கத்தினை விடுவித்துள்ளது. அங்கிருந்து வந்த தங்கம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அடையாளம் வைத்து, கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் டோல் கேட்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
கார் கரூர் அரவக்குறிச்சி டோல்கேட் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்குள்ள போலீசார் துணையுடன் பிடிக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அந்த கும்பல் நிற்கமால் தடுப்புக்களை தகர்த்து விட்டு சென்றுள்ளது. போலீசார் தொடர்ந்து விரட்டி சென்று வெள்ளியணை காவல் நிலைய சரகம் ஆட்டையாம்பரப்பு அருகில் காரை மடங்கி பிடித்தனர். காரில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த பரன்கவுடா, தாஸ், டேனியல், பவுல், பெரோஸ் கான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு வருகை தந்த மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் பாத்திரகடை வியாபாரி தங்கம் கடத்தல் வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த டி.எஸ்.பி மற்றும் போலீசாரை பாராட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில், பாத்திரகடை வியாபாரி தங்கம் கடத்தல் தொடர்பாக தகவல் கிடைத்தும் போலீசார் விரைந்து செயல்பட்டு 5 பேரை கைது செய்து 5 லட்ச ரூபாய் பணத்தினை மீட்டுள்ளனர். வந்தவர்கள் போலீஸ் டி.எஸ்.பி என்று கூறி தங்கத்தினை கடத்தி சென்று பணம் பறித்துள்ளனர்.
கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ் மேற்பார்வையில் விரைந்து செயல்பட்டு கடத்தி சென்ற வாகனம் எங்கு சொல்கிறது என்பதனை துல்லியமாக ஆராய்ந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். பாஸ்டேக் மூலமாக தான் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முடிந்ததாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர் வெளிமாநிலத்தினை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு உள்ளுரில் யார் உதவி செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்