தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி 23 நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். உடன்குடி பேரூராட்சி தூய்மைப்பணியாளர் சுடலைமாடன் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசியை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது




தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சுடலைமாடன் (வயது 54). சம்பவத்தன்று இவரை பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலையில் பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் சுடலைமாடன் கடந்த மாதம் 17-03-2023 அன்று விஷமருந்தினார். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.




இதுதொடர்பாக சுடலைமாடனின் மனைவி தங்கம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், குலசேகரன்பட்டினம் போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி, அவரது மகன் அஷ்ரப், மருமகளும் தற்போதைய பேரூராட்சி தலைவருமான ஹுமைரா பாத்திமா, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுடலைமாடனின் உறவினர்களும், தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இதையடுத்து ஆயிஷா கல்லாசி, பாபு ஆகியோரை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். அவர்கள் ரோந்து சென்றபோது, அடைக்கலாபுரம் பஸ் நிறுத்தத்தில் ஆயிஷா கல்லாசியை கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், உடல் நலம் சரியில்லாததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.




தூத்துக்குடி வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், ஆயிஷா கல்லாசியை வரும் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வரும் ஆயிஷா கல்லாசி, உடல் நிலை சீரடைந்ததும் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய பாபுவை போலீசார் தேடி வருகின்றனர். தூய்மை பணியாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பேரூராட்சி முன்னாள் தலைவி கைது செய்யப்பட்ட சம்பவம் உடன்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.