தமிழ்நாட்டில் அம்மா என்று சொன்னால் பலருக்கும் பலர் நினைவுக்கு வரலாம். ஆனால் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் அம்மா என்று சொன்னால், "அன்னபூரணி அரசு அம்மா தான் நினைவுக்கு வருவார்" . இணைய தளம் முழுவதும் அன்னபூரணி அரசு அம்மா இப்பொழுது ஃபேமஸ். பேஸ்புக், ட்விட்டர் ,வாட்ஸ் அப் எந்த சமூக வலைதளங்களும் திறந்தாலும் அன்னபூரணி அரசு அம்மாவின் முகத்தை காணாமல் நம்மால் கடந்து செல்ல முடியாது.






யார் இந்த அன்னபூரணி

 

 

 கடந்த 2014ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் தனது இவர் பங்கு கொண்டார். இதில் அவர் அரசு என்ற நபருடன்   திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிகழ்ச்சி முடிவில் தனது கணவரையும்,14 வயது பெண் குழந்தையும் பிரிந்து அரசு என்ற நபருடன் சென்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அவர் அரசுடன் ஈரோடு பகுதியில் சென்று வசித்து வந்துள்ளார். அதன்பின்னர் மர்மமான முறையில் அரசு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 


 

இதனை அடுத்து அன்னபூரணி  தன்னுடைய காதலனான அரசு உருவ சிலையை வடித்து சிலகாலம் வழிபட்டு வந்துள்ளார் . இதனை தொடர்ந்து அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் என்ற தொண்டு நிறுவனத்தையும் அந்த பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தன்னை "அன்னபூரணி அரசு அம்மனாக" மாற்றிக்கொண்டு ஆதிபராசக்தியின் அவதாரமாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே யூடியூபில் அருள் உரை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

வைரல் அம்மன்

 

இந்நிலையில் அன்னபூரணி அரசு அம்மன் புத்தாண்டில் புது பொலிவுடன் அறிமுகமாக திட்டமிட்டிருந்தார். இதற்காக வருகின்ற புதுப் புத்தாண்டன்று "அம்மாவின் திவ்ய தரிசனம்"  என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கூட்ரோடு அருகே உள்ள வல்லம் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .



அந்த நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு   " தாயின் பாதகமலங்களில் தஞ்சமடைவோம்" என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  வெளியிட்டுள்ள வீடியோவில் அன்னபூரணி அம்மன் கால் வைக்கும் இடம் முழுவதும், பெண் பக்தர்கள் அவர் "கால் கீழே மலர்களைத் தூவி மலர் பாதை " அமைத்து வழி ஏற்படுத்துகின்றனர். மேலும் அன்னபூரணியை அரசு அம்மாவின்  உருவம் பதித்த புகைப்படங்களும் நிறைய உள்ளது. " சரணம் சரணம் அம்மா, நீ வரணும் வரணும் அம்மா" ,  "சித்தரின் உருவங்களில்  சித்துக்கள் செய்பவளே சரணம் " என்ற பாடலும் பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து சில பெண்கள் அவருக்கு சூலம் ஏற்றி  தீபாராதனை காட்டுகிறார்கள்.



மேலும் சில பெண்கள் அவரை வணங்கியபடி சாமி வந்தது போல் ஆடுகிறார்கள். ஆண் பக்தர்கள் கூட சிலர் அம்மாவின் காலில் விழுந்து வணங்கி விட்டு செல்கிறார்கள். அரியணையில் அமர்ந்திருக்கும் அம்மனுக்கு பின்னாலிருந்து மயில் இறகில் காற்று விசிறி விடப்படுகிறது. அம்மாவிடம் காலில் விழுந்து வணங்கி விட்டு செல்லும் அனைத்து பக்தர்களும் அம்மாவின் திருவுருவப்படம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 

அம்மாவுக்கு தடை

 

 

 

இதற்கு முன்னதாகவும் செங்கல்பட்டு மாவட்டம் கோவிலந்தாங்கள் பகுதியில் இந்த மாதம் 19ஆம் தேதி அன்னபூரணி அரசு அம்மாவின் திவ்ய தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அனுமதியில்லாமல் நிகழ்ச்சி நடத்தியதாக, அன்னபூரணி அம்மா மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ரோகித் மீதும் தற்போது வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான புகாரை வருவாய் துறையினரிடம் பெற்று, பரிசீலனையை போலீசார் துவங்கியுள்ளனர். மேலும் புத்தாண்டில் புதுப்பொலிவுடன் அடுத்த நிகழ்ச்சிக்கு, அதுவும் செங்கல்பட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அதற்கு நாங்கள் அனுமதி மறுத்துள்ளோம். ஒரு குறிப்பிட்ட நபர் தன்னுடைய தொலைபேசி எண் கொடுத்து திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். அவருக்கு தற்பொழுது தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம் . இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறையினரிடமும் தொடர்பு கொண்டு பேசி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.



ஈரோடு காவல்துறையினரும் அன்னபூரணி அரசு அம்மாவைத் தேடி வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.  காவல்துறையினர் தடை விதித்து இருப்பதால் அன்னபூரணி அரசு அம்மா தனது பக்தர்களுக்கு காட்சி கொடுக்க முடியா சூழலில் சிக்கி உள்ளார். வீடியோ வைரல் ஆனது தொடர்ந்து  தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தொலைபேசி தொடர்பு எண்களையும் நீக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.