திருப்பதி பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி: தலித் மாணவிக்கு நேர்ந்த கொடுமை - வீடியோவை வைத்து பேராசிரியர்கள் செய்த கேவலம்
திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த தலித மாணவி ஒருவர், தனது அந்தரங்க காட்சிகளை பயன்படுத்தி இரண்டு உதவிப் பேராசிரியர்கள் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் 22 வயது தலித் மாணவி ஒருவர், இரண்டு உதவிப் பேராசிரியர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் அந்தரங்க காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
உதவி பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்
மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த அந்தப் பெண், கல்வித் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் லக்ஷ்மண் குமார் தனது நெருக்கமான காட்சிகளை வைத்திருந்ததாகவும், அதை அவர் மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதே துறையில் உள்ள மற்றொரு உதவிப் பேராசிரியரான சேகர் ரெட்டி, லக்ஷ்மண் குமாருடன் மாணவி இருக்கும் காட்சிகளை வைத்து மிரட்டி, பாலியல் துன்புறுத்தலுக்குப் பயன்படுத்தியதாகவும் அவரது புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் எல். சுப்பராயுடு, நவம்பர் 25 ஆம் தேதி பல்கலைக்கழக அதிகாரிகளை அணுகியுள்ளார். பல்கலைக்கழகத்தின் உள் குழு அவரது புகாரை விசாரித்து டிசம்பர் 5 அன்று அதன் முடிவுகளை வெளியிட்டது. இதன் பின்னர் பதிவாளர் டிசம்பர் 6 அன்று காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் லக்ஷ்மண் குமார் மற்றும் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதீய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ், லக்ஷ்மண் குமார் மீது பாலியல் துன்புறுத்தல், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், பெண்களை அவமதித்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாரின் உள்ளடக்கத்தில் சேகர் ரெட்டியின் பெயரும் உள்ளது. விசாரணையின் அடிப்படையில், அவரது பெயர் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படலாம் என்று எஸ்பி கூறினார்.
படிப்பை நிறுத்த பெற்றோர் வலியுறுத்தல்
ஆசிரியர்களின் பாலியல் துன்புறுத்தலைத் தொடர்ந்து, தனது பெற்றோர் தன்னை வீட்டிற்குத் திரும்பச் சொன்னதாகவும், மேலும் தனது படிப்பை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மாணவியிடம் பேசுவதற்காக போலீசார் ஒடிசா செல்வார்கள் என்று எஸ்பி கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக டிசம்பர் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானங்களை கொண்டு வர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினர் மடிலா குருமூர்த்தி மற்றும் காங்கிரஸின் கோராபுட் நாடாளுமன்ற உறுப்பினர் சப்தகிரி சங்கர் உலகா ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தலையிடக் கோரி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய மகளிர் ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும் குருமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார்.





















