திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்பாலானந்தல் கிராமத்தில் உள்ள் உள்ள கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பச்சையப்பன். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவருக்கு தேவகி (51), இந்திரா காந்தி  (47) என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். ஒரே தாய்க்கு பிறந்த சகோதரிகளான இவர்களில் முதல் மனைஅவி தேவகிக்கு குழந்தை இல்லை. இரண்டாம் மனைவி இந்திரா காந்திக்கு 30 வயதில் மணிகண்டன் என்ற மகனும் 3 மகள்களும் உள்ளனர். தேவகி, இந்திரா காந்தி,  மணிகண்டன் மற்றும் மணிகண்டனின் மனைவி ஆகிய நான்குபேரும் ஒன்றாக வசித்து வந்தனர்.



இந்நிலையில், வழக்கம் போல் நேற்று  தேவகி வீட்டின் நுழைவு வாயில் அருகே உள்ள அறையிலும், மற்றவர்கள் வீட்டிற்கு உள்ளேயும் தூங்கி உள்ளனர். இந்நிலையில்  அதிகாலை சுமார் 4 மணி அளவில் திடீரென தேவகியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடிவந்து பார்த்த போது, தேவகி மீது தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயை அணைத்தனர். ஆனால் தேவகி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், தேவகி தூங்கி கொண்டிருந்த இடத்தில் மண்ணெண்ணை ஊற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மணிகண்டன் மங்கலம் காவல்நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ஹேமமாலினி, உதவி ஆய்வாளர் சத்யநாதன் மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவம் நடந்துள்ள பகுதி கலசபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், மங்கலம் காவல்துறையினர் இதுகுறித்து கலசபாக்கம் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர்.



பின்னர் கலசபாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சம்பவ இடத்தில் மண்ணெண்ணெய் கேன் எதுவும் இல்லை. இதனால் தேவகி மீது யாரோ மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு கேனுடன் சென்றிருப்பதால் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் தேவகிக்கு யாருடனாவது முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தில் 500 கோடி ஊழல் - எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு