பாலிவுட் உலகை பரபரப்பாக்கியுள்ளது ராஜ்குந்த்ரா கைது. ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது அடுத்தடுத்து சில குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன. ராஜ்குந்த்ரா தன்னை நிர்வாணமாக ஆடிஷன் செய்ததாக நடிகை சங்கரிகா சுமான் அளித்த நேர்காணல் இப்போது கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதமே வைரலானது ஆனால் அப்போது அதிகம் கவனம் பெறவில்லை. இப்போது ஆபாசப்படம் விவகாரத்தில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதே வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில் பேசியுள்ள நடிகை சங்கரிகா, ''நான் ஒரு மாடல். நான் திரைப்பட உலகில் 3- 4 ஆண்டுகளாக இருக்கிறேன். இந்த லாக்டவுனில் நான் கண்ட அனுபவத்தை ஷேர் செய்ய விரும்புகிறேன். ஒரு வெப் சீரிஸில் நடிக்க உமேஷ் கமாத்திடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த வெப் சீரிஸை ராஜ்குந்த்ரா தயாரிப்பதாக கூறினார்.நான் ராஜ்குந்த்ரா குறித்து விசாரித்தேன். அவர் தன்னை ஷில்பா ஷெட்டியின் கணவர் என்று அறிமுகம் செய்துகொண்டார். இந்த வெப் சீரிஸில் தொடர்ந்து நடித்தால் பல உயரங்களை தொடலாம் என்று கூறினார். நான் சரியென்று கூறினேன். பின்னர் ஆடிஷனுக்கு அழைப்பு வந்தது. வீடியோகாலில் ஆடிஷன் நடைபெற்றது. அங்கு 3 பேர் இருந்தனர். அதில் ஒருவர் ராஜ்குந்த்ரா என்று நினைக்கிறேன். அவர்கள் என்னை நிர்வாணமாக நடிக்கக் கூறினர். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன்.அவர் இப்படியெல்லாம் செய்திருப்பது உறுதி என்றால் அவர் கைது செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்'' என்றார். ராஜ்குந்த்ராவின் கைது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில் நடிகையின் குற்றச்சாட்டு வீடியோவும் வைரலாகிறது.
முன்னதாக, ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக மும்பை போலீசார் ராஜ்குந்த்ராவை நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த தகவலை மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் உறுதி செய்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், பிப்ரவரி 2021ம் ஆண்டு இது தொடர்பான வழக்கு பதியப்பட்டது. அதாவது ஆபாசப் படங்களை தயாரித்து அதனை சில ஆப்களுக்கு விற்பனை செய்வதாக புகார். அதன் விசாரணையில் சில சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலும் விசாரணை தொடர்கிறது என்றார்.
கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ரா மீது, மோசடி, பொது இடங்களில் ஆபாசமான செயலில் ஈடுபடுவது மற்றும் ஆபாச புத்தகங்கள் அல்லது இலக்கியங்களை பகிரங்கமாக காட்சிப்படுத்துதல் அல்லது பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ராஜ்குந்த்ரா மும்பை குற்றப்பிரிவுக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். வெளியான தகவலின்படி, திரைப்பட நடிகைகளை நிர்வாணமாக நடித்தவைத்து அதனை செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்வது தொடர்பான புகாரில் ஏற்கெனவே 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த படங்கள் பணம் செலுத்தப்பட்டு பார்க்கப்பட்டும் செல்போன் ஆப்களில் வெளியாகின்றன என்கின்றனர் போலீசார்.