திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் அறநிலைத்துறைக்கு சொந்தமான முத்து மாரியம்மன் ஆலயத்திற்குள் அதே கிராமத்தை சார்ந்த தாழ்த்தப்பட்ட இன மக்களை  ஆலயம் உள்ளே செல்வதற்கு கடந்த 80 ஆண்டுகளாக அனுமதிக்கப்படவில்லை  என கூறப்பட்ட நிலையில், பொங்கல் தினத்தன்று இந்த கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவிலில்  12 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பட்டியல் இன மக்கள் தங்களையும் திருவிழா நடத்த 1 நாள் அனுமதிக்க வேண்டும் மற்றும் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.


ஆனால் ஊர்ப்பகுதி மக்கள் இதற்கு மறுத்து உடன்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலின் உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறையில் மனு அளித்தனர். 


இந்த மனுவின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என தெரியவந்தது. அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை துறையினர் பட்டியல் இன மக்கள் கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படும் என்றும், கோவில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் யார் வேண்டுமானாலும் வழிபட கோவிலுக்கு உள்ளே செல்லாம் என கூறியுள்ளனர்.


இதனால் ஊர்ப்பகுதி மக்களால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெற்றாமல் இருக்க, இந்த கிராமத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில்  காவல்துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.



இந்நிலையில், தற்போது பட்டியலின மக்களை கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்க நடவடைக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்த ஊர்பொதுமக்கள் கோவிலுக்கு உள்ளே பட்டியலின மக்களை அனுமதிக்க கூடாது என்றும் இந்த கோவில் எங்களுக்கு சொந்தமான கோவில் எனக்கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.


போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் இடையே 2 மணி நேரத்திற்கு மேலாக இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக் குமார், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, தண்டராம்பட்டு தாசில்தார் பரிமளா மற்றும் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் டி ஐ ஜி முத்துசாமி ஆகியோர் தென் முடியனூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முன்பு வந்தனர். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட ஊர் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.


80 ஆண்டுகளுக்கு பிறகு தரிசனம்


இந்நிலையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் கூடைகளுடன் மலர் மாலைகள் மற்றும் அபிஷேகப் பொருட்களை சுமந்து,  காவல்துறை பாதுகாப்புடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து கடந்த 2-நாட்களாக பூட்டப்பட்டிருந்த கோவில் கதவை திறந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு முத்துமாரியம்மன் கோவிலுக்குள்  சென்று பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தரிசனம் செய்தனர்.


முதலில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முத்துமாரியம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர், பட்டியலின மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு முத்துமாரியம்மனை கண்டு தரிசனம் செய்து கோவிலில் வலம் வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதே நேரத்தில், அசம்பாவிதம் ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காக, கடந்த 1 மாதகாலமாக காவல் ஆய்வாளர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தென் முடியனூர் கிராமத்தில் இரவு , பகலாக பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.




இதுகுறித்து பட்டியல் இன மக்கள் தரப்பில் ABP  குழுமத்திற்கு பேசுகையில்,


தாங்கள் கோவிலுக்கு சென்று வந்ததால் ஊர் பொதுமக்கள் யாரும் தங்களிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை என்றும், விவசாயக் கூலி வேலைக்கு எங்களை அழைப்பதும் கிடையாது எனவும், பட்டியலின மகக்ள் வசிக்கும் பகுதியில் இருந்து கறவை மாட்டுப் பாலை விநியோகம் செய்யும் நிறுவனங்களும் கூட வாங்க மறுப்பதாகவும், தங்கள் விவசாய நிலத்திற்கு வரவேண்டிய தண்ணீரையும் கூட  மாற்று சமூக மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பல்வேறு குற்றச்சாட்டுகளை மன வேதனையோடு முன் வைத்துள்ளனர்.


இதனால், தங்களுடைய வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தென்முடியனூர் கூட்ரோட்டில் பங்க் கடை வைத்துள்ள பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இந்திரா என்பவரது பங்க் கடையை கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தி உள்ளதாகவும் பட்டியல் இன மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். 



 இந்திரா பேசியபோது,


மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள்தான் தனது கடையை திட்டமிட்டு தீயிட்டு கொளுத்தினார்கள் என்றார். அவர் இதுகுறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எஃப் ஐ ஆர் பதிவு செய்தும், காவல்துறையினர் தீயிட்டு கொளுத்திய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதில் காலதாமதப்படுத்தி வருவதாகவும், இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 


கோவில் உள்ளே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களை அழைத்து செல்ல முனைப்பு காட்டிய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் அரசியல் அழுத்தம் காரணமாக தங்களை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக, மாற்று சமூகத்தினர் நடத்தும் கடைகளீல் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குவது கிடையாது. ஊர் பொதுமக்கள் பட்டியலைன சமூகச் சேர்ந்த மக்களை இழிவுப்படுத்தும் வகையில்பேசி நடந்துக்கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தென் முடியனூர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வெளியூர்களில் மூட்டை தூக்குதல் போன்ற கூலி வேலைக்குச் சென்றால் கூட இவர்களுக்கு வேலை தரக்கூடாது என ஊர் தரப்பினர் தடுப்பதாக கூலி தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 




ஊர் மக்கள் தரப்பில் பேசியபோது,


தென் முடியனூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 200 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான திருக்கோவிலாகும். அரசு பதிவுகளின் படி கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக ஊர் மக்களின் கட்டுப்பாட்டில் எந்தவிதமான ஜாதி பாகுபாடு இன்றி கோவிலில் பூஜை செய்து வழிபட்டு வந்ததாகவும், அரசுக்கு சொந்தமான இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில் இல்லை என்றும், கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் இந்த கோவில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தம் என கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.


இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கோவிலில் மின்சார கட்டணம் கூட கட்டியது கிடையாது என ஊர் மக்கள் குற்றம் சாட்டினர். பட்டியல் சமூகத்தினருக்கு அவர்களின் ஒப்புதல் பேரில்தான் பட்டா இடம் ஒதுக்கப்பட்டு ஊர் பொதுமக்கள் தங்களது சொந்த பணத்தில் ரூபாய் 30 லட்சம் செலவில் அவர்களுக்கென்று முத்துமாரியம்மன் கோவில் தனியாக கட்டிக் கொடுக்கப்பட்டு அவர்கள் விருப்பத்தின் பெயரில்தான் அந்த கோவில் செயல்பட்டு வந்தது என்றும் கூறியுள்ளனர்.




பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் வேண்டுமென்று இந்த கோவில் நிர்வாகத்திற்கு உள்ளே வர வேண்டும் என்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், நாங்கள் கிராமத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மளிகை பொருட்கள் வழங்குவது கிடையாது, விவசாய வேலை கூப்பிடுவதில்லை என்று கூறுவது அனைத்தும் முழுக்க முழுக்க தவறான குற்றச்சாட்டுகள் என்றும் அப்பகுதினர் தெரிவித்துள்ளனர்.




இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ABP குழுமத்திற்கு கூறுகையில்...


தென் முடியனூர் கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கிராமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் ஊர் மக்கள் ஒற்றுமையாக இருக்க சமாதான கூட்டம் நடத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் தெரிவித்தவர். இரு தரப்பினர் இடையே விரைவில் சமாதானம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், பின்னர் அங்கிருந்து காவல்துறை பாதுகாப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபடும் எனவும் தெரிவித்தார்.



இது குறித்து காவல்துறை சார்பில் கூறுகையில்


இந்திரா என்பவர் கடை எரிக்கப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஊர் மக்கள் தரப்பில் கரும்பு தோட்டம் எரிக்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தென்முடியனூர் கிராமத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.