புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த பெண்ணிடம் பகுதிநேர வேலை தருவதாகக் கூறி, 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெங்களூருவைச் சேர்ந்த 3 இளைஞர்களை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

Continues below advertisement

பகுதிநேர வேலை தருவதாகக் கூறி, 22 லட்சம் ரூபாய் மோசடி

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ஆன்லைனில் பகுதிநேர வேலை (Part-time Job) செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி அந்தப் பெண் அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் சில எளிய பணிகளை வழங்கிய அந்த கும்பல், அதற்காகச் சிறிய தொகையை கமிஷனாக அந்தப் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய அந்தப் பெண்ணிடம், "நீங்கள் அதிக முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் பெறலாம்" என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி அந்தப் பெண், தனது சேமிப்பு மற்றும் கடனாகப் பெற்ற பணம் என மொத்தம் 22 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை அந்த கும்பல் குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.

Continues below advertisement

பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், அந்தப் பெண்ணால் தனது லாபத் தொகையையோ அல்லது முதலீடு செய்த தொகையையோ எடுக்க முடியவில்லை. இது குறித்து கேட்டபோது அந்த கும்பல் முறையான பதில் அளிக்காமல் தொடர்பைத் துண்டித்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது, அந்தப் பணம் பெங்களூருவில் உள்ள சில வங்கிக் கணக்குகளுக்குச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பெங்களூரு விரைந்த தனிப்படை போலீஸார், அங்கு பதுங்கியிருந்த சையத் அகமது, முகமது அலி மற்றும் இம்ரான் ஆகிய மூன்று இளைஞர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் பொதுமக்களின் வங்கி கணக்குகளை வாடகைக்குப் பெற்று இது போன்ற ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் புதுச்சேரி அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை 

புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

எங்கே, எப்படி புகார் அளிப்பது?

இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:  

  • தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
  • புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
  •  மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
  • இணைய தளம்: www.cybercrime.gov.in 

விழிப்புணர்வே பாதுகாப்பு

ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.