தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சுப்பையா என்பவர் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பையாவின் மகள் கவிதா தன்னை நெல்லை டவுன் சிக்கந்தர் தெருவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை டவுண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன் அடிப்படையில் டவுண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இம்ரான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கவிதா தனக்கு நீதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்தார். கையில் லேப்டாப் உடன் வந்த அவர் தன்னை ஏமாற்றிய இம்ரான் குறித்த ஆதாரங்களை அதில் காண்பித்து தனக்கான நியாயத்தை பெற்று தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இது குறித்து கவிதா கூறும் பொழுது,
தனது தோழி ஒருவர் திருமணத்தில் வைத்து இம்ரானுடன் எனக்கு அறிமுகமானது, பின்னர் பேஸ்புக் மூலம் இம்ரான் தன்னிடம் பழகினார். அவர் துபாயில் வேலை செய்து கொண்டு இருந்தார், நாங்களும் குடும்பத்துடன் அங்கு தான் இருந்தோம். இம்ரான் முஸ்லீம் என்பது எனக்கு தெரியாது, அவரது பெயர் அருண்குமார் என கூறி தான் என்னுடன் அறிமுகமானார். நாளடைவில் எங்கள் பழக்கம் காதலாக மாறி என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அப்போது அவர் குடும்ப புகைப்படத்தை பார்த்த பின் அவர் ஒரு இஸ்லாமியர் என கண்டுபிடித்து விட்டேன். நான் இந்து என்பதால் வேண்டாம் என மறுத்தேன். ஆனால் அதற்கு அவர் நான் இந்துவாக மதம் மாறி திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி என்னை சம்மதிக்க வைத்ததோடு என் குடும்பத்தில் வந்து பெண் கேட்டார்.
பின்னர் தனது பெயரை இந்து மதத்திற்கு மாறியதாகவும், எனவே என்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கெஞ்சினார், அதை நம்பி கடந்த 30.10.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கோவிலில் வைத்து இம்ரானை திருமணம் செய்து கொண்டேன், திருமணத்தை பதிவு செய்ய கூறியபோது துபாயில் முக்கிய வேலை இருப்பதால் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறி என்னை அழைத்து சென்று விட்டார். அதன் பிறகுதான் அவர் போலியாக பெயர் மாற்றம் செய்ததும், பிறப்பு சான்றிதழ் முதல் பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து என்னை ஏமாற்றியதும் தெரியவந்தது, மேலும் என்னை ஏமாற்றி பல முறை உடலுறவு மேற்கொண்டார், இரண்டரை வரும் பல்வேறு பிரச்சினைகளுடன் அவருடன் வாழ்ந்து வந்தேன், அப்போது ஒரு முறை என்னை அடித்து துன்புறுத்தியதில் எனது வயிற்றில் இருந்த கரு கலைந்து விட்டது, அதன் பின்னர் தற்போது தற்போது நான் இரண்டாவதாக ஏழு மாத கர்ப்பமாக உள்ளேன்.
இந்த சூழலில் இரண்டு மாதமாக என்னை ஏமாற்றி விட்டு சென்றதுடன் எங்கிருக்கிறார் என தெரியாமல் ஒளிந்து கொண்டு இருக்கிறார். அவரது சகோதரி மற்றும் தாயார் என்னை தொடர்பு கொண்டு பணம் தருமாறு மிரட்டுகின்றனர். குடும்பத்துடன் அனைவரும் தலைமறைவாகியதுடன் என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்கின்றனர். இரண்டரை வருடம் என்னுடன் வாழ்ந்து விட்டு என்னை கர்ப்பமாக்கிவிட்டு தற்போது என்னை விட்டு சென்று விட்டார். திருமணம் செய்ததற்கான எந்த ஒரு ஆதரமும் இல்லாததால் நான் செய்வதறியாது வயிற்றில் குழந்தையுடன் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகிறேன். என்னிடம் 15 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். என்னைப் போன்று பல பெண்கள் அவரிடம் ஏமாந்துள்ளனர், எனக்கு உரிய நீதி கிடைப்பதுடன் இம்ரான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார், தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்து சென்றார்.