ராஜஸ்தானின் பாரத்பூரில் 30 வயது இளைஞர் ஒருவர் தன் இரண்டு நண்பர்களின் உதவியுடன் தன் தந்தையையே கொலை செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 25 அன்று, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்த நபரின் பெயர் மோகாம் சிங் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவரது மகன் ராஜேஷ் சிங் அவரது காப்பீட்டுப் பணமான சுமார் 4 லட்சம் ரூபாய்க்காக அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பாரத்பூரில் உள்ள கிராமம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 


தன் தந்தை இறந்தால் சுமார் 4 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ராஜேஷ் சிங் தன் தந்தையின் பெயரில் நான்கு காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளார். மேலும், இந்தக் கொலையை விபத்து போல மாற்றுவதற்காக முயன்றுள்ளார் ராஜேஷ் சிங். எனினும் மூன்று குற்றவாளிகளும் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்டதால் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 



ராஜஸ்தானின் கோசி பகுதியில் இந்த மூவரும் ஒளிந்து கொள்ள முயன்ற போது, அப்பகுதியில் வந்த காவல்துறை ரோந்து வாகனம் இவர்களைக் கைது செய்துள்ளது. `நாங்கள் ரோந்து சென்ற போது, மூவரும் மரத்திற்குப் பின் ஒளிந்து கொண்டனர். கேள்வி எழுப்பிய போதும் சந்தேகத்திற்கு இடமான முறையில் பதில் வந்தது. எனவே பொது அமைதியைக் குலைப்பதாக அவர்களைக் கைது செய்தோம்’ என்று காவல்துறையினர் இதுகுறித்து கூறியுள்ளனர்.


மறுநாள் அதே கோசி பகுதியின் சாலையில் மோகாம் சிங்கின் உடல் ரத்த வெள்ளத்தில் கைப்பற்றப்பட, காவல்துறையினர் அதை விபத்து என்று கருதியுள்ளனர். எனினும், தலையில் சில காயங்களைத் தவிர பின்பக்கமோ, தோள்களிலோ எந்தக் காயமும் இல்லை என்பதால் காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். 



காவல் ஆய்வாளர் ராஜேஷ் பதக் இதுகுறித்து கூறிய போது, `மோகாம் சிங் குறித்து அவரது உறவினர்களிடம் விசாரித்ததில், அவருக்கு அந்தக் கிராமத்திலேயே மகன் இருப்பது தெரிய வந்தது. உடனே நாங்கள் மறைந்த மோகாம் சிங்கின் மகன் ராஜேஷ் சிங்கைக் கண்டுபிடித்தோம். ஆனால் பொது அமைதியை சீர்குலைத்ததற்காக அவர் ஏற்கனவே காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். சந்தேகத்துடன் அவரை விசாரித்ததில், தான் கொலையைச் செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்’ எனக் கூறியுள்ளார். 


25 வயதான விஜயேந்திரா, 26 வயதான கன்ஹா ஆகிய இருவரும் ராஜேஷ் சிங்குடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன், ராஜேஷ் சிங்கின் சகோதரர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவரது சகோதரரின் மனைவிக்குக் காப்பீட்டுத் திட்டத்தின் பணம் கிடைத்தது. இதனால் தன் தந்தையின் பெயரில் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்து, அவரைக் கொன்று பணத்தைப் பெற முயற்சி செய்ததாக ராஜேஷ் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.