விக்கிரவாண்டி அருகே சோகம் ..! வெடித்து சிதறிய பாறை ; தாய் கண்ணெதிரே உயிரிழந்த மகள்
விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே, பாறையை வெடி வைத்து தகர்த்த போது தலையில் கல் விழுந்து, தாய் கண்ணெதிரே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் டி.கொசப்பாளையம் கிராமத்தில் பாறைக்கு வெடிவைத்து தகர்க்கும் போது பாறையின் கற்கள் தாக்கியதில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அடுத்த டி.கோசப்பாளையம் கிராமத்திற்கு அருகிலுள்ள திருக்குணம் ஏரியிலிருந்து தண்ணீர் செல்லும் ஓடையை வேளாண்துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓடையின் குறுக்கே பாறை ஒன்று இருந்ததால் அதனை வெடிவைத்து தகர்க்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வரும் நிலையில், சங்கர் என்பவர் வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மாலை பாறைக்கு வெடிவைத்து தகர்க்கும் போது 200 மீட்டர் தொலைவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஏழுமலை- முத்துலட்சுமி என்பவரின் 10 வயது மகள் காயத்ரியின் பின் தலையில் பாறை தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற கஞ்சனூர் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வெடி வைக்க பயன்படுத்தப்பட்ட ட்ராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். உரிய அனுமதி இல்லாமலும், முன்னேற்பாடுகள் செய்யாமலும் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் இப்பணியில் ஈடுபட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமி வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் தாய் முத்துலட்சுமி கணவர் ஏழுமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்றரை ஆண்டுகளாக டி.கொசபாளையத்தில் உள்ள தாய் நெல்லியம்மாள் வீட்டில் வசித்து வருவதும் அதே ஊரில் உயிரிழந்த சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.