காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதலர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுக்க காதலர் தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பலரும் தங்கள் காதலன்/காதலிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிஃப்ட்கள் உள்ளிட்ட பல சர்ப்ரைஸ்களை கொடுத்தனர். மேலும் காதலின் அடையாளமாக கருதப்படும் ரோஜாப்பூவின் விலையும் கடுமையாக உயர்ந்தது. கோயில்கள், கடற்கரை, தியேட்டர்கள், மால்கள் என எங்கு பார்த்தாலும் காதலர்களின் கூட்டம் தான் காண முடிந்தது.
இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த காதலர் தின கொண்டாட்டத்தில் சோகமான சம்பவம் ஒன்று கோவாவில் நிகழ்ந்துள்ளது. வெளியூர்களில் பணிபுரியும் காதலர்கள், காதலர் தினத்தை கொண்டாட பல்வேறு வெளியிடங்களுக்கு செல்வது போல, உத்தரபிரதேசத்தை சேர்ந்த காதல் ஜோடி கோவாவிற்கு சென்றுள்ளனர். விபு சர்மா என்ற அந்த இளைஞர் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா என்ற பெண் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே காதலர் தினம் கொண்டாட விபு சர்மா, சுப்ரியா இருவரும் கோவா சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்த அவர்கள் நேற்று காதலர் தினம் என்பதால் 13 ஆம் தேதி நள்ளிரவு முதல் கோவாவின் பலோலம் கடற்கரையில் சுற்றி திரிந்துள்ளனர். மேலும் அங்கு கடலில் இறங்கி விளையாடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர்.
இதனைத் தொடர்ந்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், கடலில் மூழ்கிய இருவரையும் மயங்கிய நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சுப்ரியாவும் விபுவும் உறவினர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரும் குடும்பத்தினருக்குத் தெரியாமல் கோவா வந்ததும் விசாரணையில் வெளிவந்தது.