Thai Extortion Scandal: மூத்த புத்த துறவிகளை குறிவைத்து மிரட்டி 100 கோடி ரூபாய் அளவிற்கு, பணம் பறிப்பில் ஈடுபட்ட விலாவன் எம்சாவத் எனும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் அம்பலமான பாலியல் ஊழல்:

பாலியல் மற்றும் பணம் பறிப்பு தொடர்பான மிகப்பெரிய ஊழல் அம்பலமாகி ஒட்டுமொத்த தாய்லாந்தையும் உலுக்கி எடுத்துள்ளது. மூத்த புத்த துறவிகளை குறி வைத்து தனது வலையில் விழச்செய்து, அவர்களுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தங்களது பிரம்மச்சரியம் சபத்தை மீறி துறவிகள் பெண்ணுடன் உறவில் இருந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரில் சிக்கிய ஒன்பது மடாதிபதிகள் மற்றும் மூத்த துறவிகள் அந்த பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ராயல் தாய் காவல்துறை மத்திய புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.

யார் இந்த விலாவன் எம்சாவத்?

பாங்காக்கின் வடக்கே நொந்தபுரியில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் வைத்து 30 வயதான விலாவன் எம்சாவத் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மிரட்டி பணம் பறித்தல், பணமோசடி செய்தல் மற்றும் திருடப்பட்ட பொருட்களைப் பெறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன.  அவர் குறைந்தது ஒன்பது துறவிகளுடன் பாலியல் உறவு கொண்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தொலைபேசிகளைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, புத்த மதத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் மற்றும் நெருக்கமான வீடியோக்களைக் கண்டுபிடித்தனர். மிரட்டி பறித்த பணத்தை சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவில் அவர் செலவிட்டது கண்டறியப்பட்டுள்ளது.

சில துறவிகள் விலாவனுடன் உறவு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டதாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாக அவரை தொடர்புகொண்டதாகவும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடன் நீண்ட காலம் உறவில் இருந்த ஒரு துறவியிடம் இருந்து காரை பரிசாக பெற்றுள்ளார். அதேகாலகட்டத்தில் மற்றொரு துறவியுடனும் உறவில் இருந்தது அம்பலமானதும், காரை பரிசளித்த நபரை மிரட்டி பணம் பறிக்க தொடங்கியுள்ளார் எனவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

80,000 ஆபாச கோப்புகள், ரூ.102 கோடி பறிப்பு:

விலாவன் எம்சாவத் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 385 மில்லியன் பாட், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 102 கோடி அளவிற்கு பணம் பறிப்பில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வீட்டில் பல புத்த துறவிகளுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்ட 80,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை துறவிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றன.

கடந்த ஜுன் மாதம் பாங்காக்கில் ஒரு பெண்ணின்மிரட்டலை தொடர்ந்து ஒரு துறவி திடீரென துறவறத்தை விட்டு வெளியேறியபோது இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாட் திரி தோட்சதெப் மடாலயத்தின் மடாதிபதி காணாமல் போனபோது இந்த வழக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.  எம்சாவத்தின் மிரட்டலில் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அந்த துறவியால் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அந்த பெண் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

புத்த மதத்தில் சர்ச்சை:

தாய்லாந்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் புத்த மதத்தை பின்பற்றுபவர்களாவர். அங்கு சுமார் 200,000 உச்ச நிலையை எட்டிய துறவிகளும், தொடக்க நிலையில் உள்ள 85,000 புதியவர்களும் உள்ளனர். சங்கா அல்லது பௌத்த துறவி சமூகம் சம்பந்தப்பட்ட ஊழல்கள் தாய்லாந்தில் புதியவை அல்ல, மேலும் அவை பெரும்பாலும் பாலியல், பணம் அல்லது இரண்டையும் உள்ளடக்கியது ஆக இருக்கும். ஆனால் விலாவனில் தொடர்புடைய துறவிகள் பெரும்பாலானோர் மிகவும் மூத்த துறவிகள் என்பது தான் தாய்லாந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.