புதுச்சேரியில் தனியார் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 8 குழந்தைகள் காயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 


8 சிறுமிகளுக்கு காயம் 


புதுச்சேரி : புதுச்சேரிநகரப் பகுதியான மகாத்மா காந்தி வீதியில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மூலகுளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் வழக்கம்போல், இன்று ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது புஸ்ஸி வீதியில் ஆட்டோ வந்தபோது, புதிய பேருந்து நிலையம் நோக்கி எதிரே வந்த பேருந்து ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 8 சிறுமிகளுக்கு தலை, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு அலறினர்.


உடனே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததனர். அங்கு சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுகுறித்து,  ஆளுநர் தமிழிசை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :


புதுச்சேரி புஸ்ஸி வீதியில் இன்று (20-06-2023) காலை தனியார் பள்ளிக் குழந்தைகளை எற்றிச் சென்ற ஆட்டோ, பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதில் ஆட்டோவில் பயணம் செய்ய எட்டுப் பள்ளிக் குழந்தைகள் மற்றும ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சென்று பார்வையிட்டார். குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர், "பெற்றோர்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். ஆறு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  அவர்களின் இரண்டு பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.  மருத்துவர்கள் விரைவாக செயல்பட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.  சில பெற்றோர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறினர்.  ஆனால், அவர்களுக்கு இங்கேயே தரமான மருத்துவ சிகிச்கைக்கான வசதிகள் செய்துதர  நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.அறுவை சிகிச்சை மருத்துவர்களும் அறுவை சிகிச்சை கூடங்களும் தயார் நிலையில் உள்ளது.  குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.  அனைவரும் விரைவாக குணமடைய இறைவனை வேண்டுவோம்" என்று தெரிவித்தார்.