கோவையில் அதிர்ச்சி: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. ஒரே நாளில் 3 ஆசிரியர்கள் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது!

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆசிரியர்கள் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 17 வயது மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள காணியப்பன் (31) என்பவர், அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தொந்தரவு செய்துள்ளார். காணியப்பன் மனைவி மகாலட்சுமி (25) தனது கணவரை பள்ளி மாணவியும் காதலிப்பதாக நினைத்து, மாணவியை துன்புறுத்தியும் தகாத வார்த்தைகளால் மகாலட்சுமி பேசியதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

இது குறித்து பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த  புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் காணியப்பன் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதும், அவரது மனைவி மகாலட்சுமி பள்ளியில் படிக்கும் மாணவியை தவறாக பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து காணியப்பன் மற்றும் மகாலட்சுமி ஆகிய கணவன் மனைவி இருவரையும் போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர்கள் போக்சோவில் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அப்பள்ளியில் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் (43) மற்றும் கோவை சிட்ரா பகுதியைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் (46) ஆகியோர் பள்ளியில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் அப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம், இருவரும் கடந்த ஒரு வருடமாக அடிக்கடி தவறாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவரும் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆசிரியர்களின் தொல்லையால் மனமுடைந்த மாணவி சைல்டு லைனில் புகார் அளித்தார். பின்னர் குழந்தைகள் நலக்குழு மூலம் மாணவி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். குழந்தைகள் நலக்குழுவினர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர்கள் பாலச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதேபோல கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் பிரபாகரன் என்ற உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதேபோல கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆசிரியர்கள் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola